Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

‘சில்’ துணி மோசடி விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சரமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

“சில் துணி விநியோகிக்க தானே உத்தரவிட்டதாக மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார். இதன்மூலம், அவருக்கு எதிராகவும் வழக்குத் தொடர முடியும். குறித்த வழக்கு விசாரணை முடியும் வரை காத்திருந்தே வீரரைப்போன்று இப்போது மஹிந்த ராஜபக்ஷ பேசுகின்றார். தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளருக்கு சார்பாக பொருட்கள் விநியோகிக்க வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் பல தடவைகள் எச்சரித்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இதில் ஈடுபட்டார்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சில் துணி மோசடியில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும், தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பல்பிட்டவும் தண்டிக்கப்பட்ட போதும், அதற்கு உத்தரவு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி தப்பியிருப்பது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, “இரண்டு அடிப்படைகளில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தொடர முடியும். சில் துணியுடன் மஹிந்தவின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சுவர்க்கடிகாரம் மற்றும் மஹிந்தவுக்கு வாக்களிக்குமாறு கோரும் துண்டுப்பிரசுரம் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

சில் துணி விநியோகிப்பது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் 2015 செப்டம்பர் 11ஆம் திகதி சுதந்திரக் கட்சிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். விகாரைகளில் அரசியல் நோக்கில் சில் துணி விநியோகிப்பதை நிறுத்துமாறும் இது தொடர்பில் யாராவது வழக்கு தொடர்ந்தால் தனக்கு ஆதாரங்களை வழங்க நேரிடும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.

தேர்தலில் வெற்றியீட்டினாலும், ஆசனத்தை இழக்க நேரிடும் எனவும் ஆணையாளர் எச்சரித்திருந்தார். 2015 நவம்பர் 22ஆம் திகதி அவர் சகல கட்சிகளுக்கும் மீண்டும் கடிதம் அனுப்பியிருந்தார். அமைச்சு செயலாளர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக செயற்படுவது இலஞ்சம் வழங்கிய தவறாகும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

லலித் வீரதுங்க இது தொடர்பில் அறிந்தே இவ்வாறு நடந்துள்ளார். அவர்தான் மற்ற செயலாளர்களை அறிவுறுத்தியிருக்க வேண்டும். இவ்வாறு தெரிந்து கொண்டே தவறு செய்தவர்களை பாதுகாக்கவே சில பிக்குமார் பணம் திரட்டுகின்றனர். இவர்கள் கடந்த காலத்தில் யாருடன் இருந்தார்கள் என்பது எமக்குத் தெரியும். இவர்கள் இருவரும் தவறு செய்தது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது.

வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தானே இதற்கு உத்தரவு வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி தற்பொழுது கூறுகிறார். அவருக்கு வழக்கு விசாரணை நடைபெறுகையில் இதனை கூறியிருக்க முடியும். 28 நாட்கள் வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது. நீதிமன்றத்திற்கு வந்து கூட அவருக்கு இதனை கூறியிருக்கலாம். தான் உத்தரவு வழங்கியதை மஹிந்த ஏற்றுக்கொண்டுள்ளதால் அவருக்கு எதிராக எவருக்கும் வழக்கு தொடர முடியும்.

19வது திருத்தத்தின் பிரகாரம் மட்டுமன்றி சாதாரணமாகவே கூட வழக்கு தொடர முடியும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு எதிராக வோடர்ஸ் ஏஜ் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

8 தேங்காய்களை திருடியதற்காக தண்டிக்கப்பட்ட சிறுவனுக்காக பிக்குமார் இவ்வாறு பணம் சேர்த்தார்களா? இலஞ்சம் பெற்றவர்களுக்காக பணம் சேர்ப்பது இலஞ்சத்திற்கு உதவுவது போன்றதாகும்.” என்றுள்ளார்.

0 Responses to ‘சில்’ துணி மோசடி தொடர்பில் மஹிந்தவுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும்: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers