Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு தெற்காசிய உறுப்பு நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்களின் பங்களிப்புடன், இன்று செவ்வாய்க்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் இன்றைய இந்த அமர்வில் கலந்துகொள்கின்றனர்.

தெற்காசிய நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்களும் இதில் கலந்துகொள்வர். இதனை முன்னிட்டு இன்று பிற்பகல் 02.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. இன்று பிற்பகல் 01.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிதிகளின் வருகை இடம்பெறவுள்ளதுடன், 01.35 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய வருகை தருவார். அவரை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க வரவேற்கின்றார். அதனைத் தொடர்ந்து தெற்காசிய அமைப்பின் செயலாளர் நாயகம் மற்றும் சார்க் நாடுகளின் சபாநாயகர்களது வருகை இடம்பெறும்.

சபாநாயகரும் பாராளுமன்ற செயலாளர் நாயகமும் அவர்களை பாராளுமன்ற நுழைவாயிலில் வைத்து வரவேற்கவுள்ளதுடன், அதன் பின்னர் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவும், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் அவர்களை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியின் 2வது மாடியிலுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமரது விருந்தினர் அறைகளுக்கு அழைத்துச் செல்வர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகை பிற்பகல் 01.48 மணிக்கும், ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவின் வருகை 01.50 மணிக்கும் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து அங்கு விசேட அதிதிகளுக்கான தேநீர் விருந்துபசாரமொன்று நடைபெறவுள்ளது.

பின்னர் பிற்பகல் 02.20 மணிக்கு விசேட அதிதிகள் பாராளுமன்ற சபையிலுள்ள சபாநாயகர் கலரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு 02.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. விடேச அமர்வில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றவுள்ளனர்.

இதில், தெற்காசிய அமைப்பின் செயலாளர் நாயகம் அம்ஜத் ஹூசைன் பி. சையல், இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், பங்களாதேஷ் பாராளுமன்ற சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சௌத்ரி, நேபாள பாராளுமன்ற சபாநாயகர் ஓனசாரி கார்தி, மாலைத்தீவு பாராளுமன்ற சபாநாயகர் அப்துல்லா மஸீஹ் மொஹமட், பூட்டான் தேசிய பேரவை சபாநாயகர் ஜிக்மி ஷங்போ மற்றும் ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் ஆகியோர் இந்த விசேட பாராளுமன்ற அமர்வின் விசேட அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

1948ஆம் ஆண்டு பெப்ரவரி (04) இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 1947ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் (14) பாராளுமன்றம் உருவாக்கப்பட்டது. அன்றையதினமே முதலாவது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றது.

அரச பேரவையில் முதலாவது சபாநாயகராக பிரான்சிஸ் மொலமூரே தெரிவுசெய்யப்படடார். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை பாராளுமன்றம் கடந்த எழுபது வருடங்களில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்தது. 1972ஆம் ஆண்டு மே மாசம் 22ஆம் திகதியுடன் இலங்கை குடியரசானது. இதன் பின்னர் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதுடன், 1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக அதிகரிக்கப்பட்டது.

1947ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு வரை பாராளுமன்றம் காலி முகத்திடலுக்கு முன்னால் அமைந்திருந்தது. அதன் பின்னர் சுமார் 35 வருடங்களாக ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டையில் பாராளுமன்றம் இயங்கி வருகிறது.

0 Responses to இலங்கைப் பாராளுமன்றத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று விசேட அமர்வு!

Post a Comment

Followers