Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அண்மையில் மத்திய கிழக்கில் சூடு பிடித்துள்ள விவகாரமாக குர்துக்களின் தனி மாநிலத்துக்காக நடத்தப் பட்ட வாக்கெடுப்பும் அதன் பின் சர்வதேசத்தின் மத்தியில் எழுந்துள்ள அழுத்தமும் அமைந்துள்ளன. இதன் ஒரு  கட்டமாக குர்துக்கள் தொடர்ந்து தனி தேசத்துக்காகப் போராடினால் துருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் தாக்குவதற்குத் தயார் நிலையில் உள்ளதாக அந்நாட்டு அதிபர் எர்டோகன் எச்சரித்துள்ளார்.

மேலும் தனது நாட்டினூடாக செல்லும் குர்துக்களின் எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தையும் தடை செய்வோம் எனவும் குர்துக்களுக்கு துருக்கி மிரட்டல் விடுத்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஈராக்கின் தன்னாட்சி பகுதிகளில் குர்துக்கள் மேற்கொண்ட  சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு அதிகரித்திருந்த அழுத்தங்கள் மற்றும் சர்வதேசத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்ந்திருந்தது. முக்கியமாக வாக்களிப்பு வடக்கு நகரமான எர்பில் மற்றும் தலைநகர் பக்தாத்துக்கு இடையே உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளிலும் பழங்குடியினர்கள் கலந்து வாழும் எண்ணெய் வளம் மிக்க மாகாணமான கிர்குக் இலும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் ஈராக் எல்லையோரமாகத் தங்கி இருக்கும் எமது ஆயுதம் தரித்த படையினர் குர்திஸ்டான் தனியாகப் பிரிவதைத் தடுக்க எத்தகைய விளைவு ஏற்பட்டாலும் தாக்கத் தயாரக வைக்கப் பட்டுள்ளனர் என எர்டோகன் கருத்துத் தெரிவித்துள்ளார். இதைவிட பதட்டத்தை அதிகரித்துள்ள விடயங்களாக ஈராக்குக்கு துருக்கியில் இருந்து எந்தவொரு நபர் அல்லது பொருள் செல்ல அனுமதி மறுக்கப் பட்டுள்ளதும் எல்லைகள் மூடப்பட்டு எல்லை தாண்டி எதுவும் செல்ல முடியாது எனத் தடைச் சட்டம் விதிக்கப் பட்டுள்ளதும் அமைந்துள்ளன. துருக்கியின் ஒரேயொரு தரை வழியிலான எல்லை ஈராக்குடன் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஈராக் பகுதியில் எல்லையைக் கடப்பது அனுமதிக்கப் பட்டுள்ள போதும் துருக்கியில் இரு பகுதிகளிலும் ஒரு வாரத்துக்குப் போக்குவரத்துக்கு விதிக்கப் பட்ட தடை நீடிக்கும் எனத் தெரிய வருகின்றது. குர்திஸ்டான் சுதந்திர வாக்கெடுப்பு சட்டத்துக்கு விரோதமானது மற்றும் செல்லாது என துருக்கி தவிர ஈராக் மத்திய அரசும் ஈரானும் கூட கடுமையாக எதிர்த்துள்ளன. திங்கள் நடந்த வாக்கெடுப்பில் வடக்கு ஈராக்கைச் சேர்ந்த 5 மில்லியன் பொது மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை துருக்கி நாட்டில் இருந்து குர்துக்களின் வான் பரப்பின் மீது விமானங்களைப் பறக்க அனுமதிக்க வேண்டாம் என ஈராக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை மத்தி கிழக்கில் குர்துக்கள் சுதந்திர மாநிலம் வேண்டி நடத்தி செப்டம்பர் 25 ஆம் திகதி நடத்திய வாக்கெடுப்பில் மிகவும் இரகசியமான முறையில் அவர்களுக்கு இஸ்ரேல் உதவி செய்ததாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. இதனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு இன்று ஞாயிற்றுக்கிழமை முற்றிலும் மறுத்துள்ளார். இது குறித்து சனிக்கிழமை துருக்கி அதிபர் எர்டோகன் வெளியிட்ட செய்தியில் குர்திஸ்டான் விடுதலை கோரி செப்டம்பர் 25 இல் நடத்தப் பட்ட சுதந்திர வாக்கெடுப்பில் இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பு முக்கிய பங்காற்றியது என்றும் வெற்றிக்கான அறிகுறி தென்படுகையில் நடத்தப் பட்ட கொண்டாட்டத்தில் இஸ்ரேலியக் கொடிகள் அசைக்கப் பட்டதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

மேலும் குர்துக்களின் சுதந்திரத்துக்கு வெளிப்படையாக ஆதரவளித்த ஒரேயொரு நாடாக விளங்கும் இஸ்ரேலோ துருக்கியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன் பிரதமர் நெதன்யாஹு குர்து இனத்தவர்கள் சுதந்திர மாநிலத்தைப் பெற முறையாக நடத்தும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் தமது ஆதரவு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் காஸாவை ஆட்சி செய்த ஹமாஸ் இஸ்லாமிய இயக்கத்துக்கு துருக்கி உதவி செய்தது மாத்திரம் எந்தவிதத்தில் நியாயம் என்றும் நெதன்யாஹு கேள்வி எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to குர்து வாக்கெடுப்புக்கு எதிராக ஆயுதப் பிரயோகம் செய்வோம் என துருக்கி அதிபர் எச்சரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com