Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்பெயினிலிருந்து தனி நாடு கோரும் கட்டலோனியா பொதுஜன வாக்கெடுப்பில் ஸ்பெயின் காவல்துறை வன்முறையை உபயோகித்ததால் 300 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வாக்கெடுப்பில் கட்டலோனியா மக்கள், தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தால் அடுத்த 48 மணிநேரத்தில், கட்டலன் பாராளுமன்றம், அம்மாநிலத்தை தனிநாடாக அறிவித்து கொள்ளும் எனவும், ஸ்பெயினிலிருந்து முற்றாக தன்னை விடுவித்துக் கொள்ளும் எனவும், அம்மாநில அரசு அறிவித்தது.

இதையடுத்து ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் உள்ள மத்திய அரசு, இவ்வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என அறிவித்ததுடன், இவ்வாக்கெடுப்பை ஒழுங்கு செய்பவர்கள், வாக்குப் பத்திரங்களை அச்சடிப்பவர்கள், வாக்குச் சாவடிகளாக தமது இடங்களை அறிவித்துக் கொள்பவர்கள் என அனைவர் மீதும் கடும் சட்டம் பாயும் என அறிவித்தது.

இதையும் மீறி, இன்று வாக்களிப்பு நடைபெற முயற்சி நடந்ததால், காவல்துறையினருக்கும், கட்டலோனியா சுதந்திரத்திற்காக போராடும் புரட்சியாளர்களுக்கும் இடையில் வன்முறைப் போக்கு அதிகரித்தது. சுமார் 335 க்கு மேற்பட்ட பொதுமக்கள் இதில் காயமடைந்தனர்.

சுமார் 5.3 மில்லியன் கட்டலன் மக்கள் இவ்வாக்களிப்பில் கலந்து கொள்ளலாம் என கட்டலோனியா மாநில அரசு அறிவித்திருந்ததுடன், சுமார் 7200 பொதுமக்கள் வாக்களிப்பு ஏற்பாட்டாளர்களாக தன்னலத் தொண்டு புரிய முன்வந்திருந்தனர். சுமார் 2315 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

கட்டலன் சுயமாநில அதிபர் கார்லெஸ் புஜிடெமொண்ட் இன்றைய வன்முறைகள் குறித்து கண்டனம் வெளியிடுகையில், அமைதியாக நடைபெறவிருந்த கட்டலன் தனிநாடு கோரும் வாக்களிப்பில் வன்முறைகளை வேண்டுமென்றே கட்டவிழ்த்து விட்டதால், எம்மை கட்டுப்படுத்திவிட முடியாது. தனிநாடு கோரிக்கைக்கு  எத்தனை வீதமான கட்டலன் மக்களின் ஆதரவு கிடைக்கிறது என்பது உலகத்துக்கு பறைசாற்றியே தீருவோம் என்றுள்ளார். அதோடு இது சுதந்திரம் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல. அடிப்படை மனித உரிமை விடயம். மக்கள் அவரவர் விருப்பத்தை கூறுவது அவர்களின் அடிப்படை மனித உரிமை என்றும் அவர் வலிறுத்தியுள்ளார்.

இதேவேளை இவ்வாக்கெடுப்பு முழுமையாக நடைபெற்றாலும், 50 % வீதமான கட்டலன் மக்கள் தனிநாடாக அம்மாநிலத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என அரசியல் கணிப்பாளர்கள் கருதுகின்றனர்.

ஸ்பெயின் நாட்டின் வடக்கு மாநிலமான கட்டலோனியாவில் 7.5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். மிகப்பழமை வாய்ந்த வரலாற்றையும், தனக்கான தனித்துவ மொழியையும் கொண்டவர்கள் அம்மக்கள்.

எனினும் 1939-75 இக்கு இடைப்பட்ட பிராங்கோ ஆட்சியில் கட்டலோனியாவின் தனித்துவ மொழி, கலாச்சார அடையாளங்கள் முற்றாக அடக்குமுறைக்குள் கொண்டுவரப்பட்டன. சில வருடங்களுக்கு முன்னர் ஸ்பெயினில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, அப்போது செல்வந்த மாநிலமாக இருந்த கட்டலோனியா தனக்கான சுயாதீன நிதிச் சுதந்திரத்தை தருமாறு போராடியது. அன்றிலிருந்து ஒரு அரசியல் போராட்டமாகவே இது மாற்றமடைந்தது.

0 Responses to கட்டலோனியா தனி நாடு கோரும் வாக்கெடுப்பை தடுத்தது ஸ்பெயின்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.