Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடகொரியாவின் யுத்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக கொரியத் தீபகற்பப் பகுதியில் வானில் பறந்த அமெரிக்கக் குண்டு வீச்சு விமானங்களினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குவாம் தளத்தில் இருந்து அமெரிக்காவின் இரு போர் விமானங்கள் ஜப்பான் மற்றும் தென்கொரிய வான்பரப்பில் பறந்ததாகத் தெரிய வருகின்றது.

இந்த அமெரிக்க விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்ட போது தென்கொரிய வான்பரப்பில் தென் கொரிய போர் விமானங்களும் ஜப்பான் வான் பரப்பில் அந்நாட்டின் இரு போர் விமானங்களும் இணைந்து பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தப் போர்ப் பயிற்சியின் போது அமெரிக்காவின் B-1B ரக இரு போம்பர் விமானங்களும் தென்கொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பரப்பில் வானில் இருந்து நிலத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைப் பயிற்சியை மேற்கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அண்மையில் ஐ.நா பாதுகாப்புச் சபை வடகொரியாவைச் சேர்ந்த 4 பாரிய கப்பல்கள் உலக நாடுகளின் எந்தவொரு துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது எனத் தடை உத்தரவு பிறப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. குறித்த 4 பாரிய சரக்குக் கப்பல்களும் தடை செய்யப் பட்ட பொருட்களை வடகொரியாவுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ததால் இத்தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும் ஐ.நா அறிவித்துள்ளது. முதன்முறையாக ஒரு நாட்டின் கப்பல்களுக்கு இவ்வாறு தடை உத்தரவு பிறப்பித்துள்ள ஐ.நா குறித்த கப்பல்கள் பயணம் செய்ய எந்தத் தடையும் இல்லை என்றும் துறைமுகங்களுக்குச் செல்ல மாத்திரமே இத்தடை எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தென்சீனக் கடற்பரப்பில் சீனாவின் இறையாண்மையை மீறும் விதத்தில் மறுபடியும் ஒருமுறை அமெரிக்காவின் போர்க் கப்பல் நுழைந்ததாக சீனா மீண்டும் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. வருடம் தோறும் கோடிக் கணக்கான டாலர் பெறுமதியான வணிகம் நிகழும் தென்சீனக் கடற்பரப்பின் அனைத்துப் பகுதியையும் தன்னுடையது என சீனா சொந்தம் கொண்டாடி வருவதுடன் பல செயற்கைத் தீவுகளையும் உருவாக்கி வருகின்றது. இதனால் இக்கடற்பரப்பு எல்லையில் அமைந்துள்ள வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் போன்ற நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே சர்ச்சை நிலவி வருகின்றது. இந்நிலையில் தான் தென் சீனக் கடற்பரப்பில் சர்ச்சைக்குரிய சன்ஷா தீவுகள் அருகே அமெரிக்கப் போர்க் கப்பல் நிறுத்தி வைக்கப் பட்டதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கொரியத் தீபகற்பத்தின் மீது பறந்த அமெரிக்க குண்டு வீச்சு விமானங்கள்!

Post a Comment

Followers