Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

‘எதிர்வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்தை ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்படாவிட்டால், தனித்துப் போட்டியிடுவோம்’ என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுவார்த்தைக்காக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பேச்சுவார்த்தை குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வேலுகுமார், அ.அரவிந்தகுமார் மற்றும் சண். பிரபாகரன் ஆகியோர் அடங்குகின்றனர் என்றும் அந்தக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில், தமிழ் மக்கள் வாழும் அநேகமான மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை ஆகியனவற்றில், போட்டியிட நாம் முடிவு செய்துள்ளோம்.

வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களின் தலைமை கட்சி என்ற அடிப்படையிலேயே இந்தப் பேச்சுகள் நடைபெறுகின்றன. கடந்தகால தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின், தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்த ஒருசில இடங்களில் அதே உறுப்பினர்கள் போட்டியிட உடன்படும், அதேவேளை ஏனைய தமிழ் பெரும்பான்மை வட்டாரங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களே போட்டியிடவேண்டும் என்பது எங்கள் உறுதியான நிலைப்பாடாகும்.

கூட்டு சேர்ந்து போட்டியிடுவதில் உரிய புரிந்துணர்வு இல்லையெனில், நாடெங்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணி தனித்து களமிறங்கவும் தயங்காது” என்றுள்ளது.

இதேவேளை, “காலத்தின் தேவை கருதி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டாக போட்டியிட்டாலும் அல்லது தனித்து எங்கள் சின்னத்தில் போட்டியிட்டாலும் எங்கள் தனித்துவம் எப்போதும் தலை நிமிர்ந்து நிற்கும்.“ என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஐ.தே.க.வுடன் புரிந்துணர்வு ஏற்படாவிட்டால் தனித்துப் போட்டி: தமிழ் முற்போக்குக் கூட்டணி

Post a Comment

Followers