Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

"மச்சான் இப்ப எங்கடா போறம்?"

"சந்துரு வீட்ட.... மச்சி நேராப்போகாத அப்பிடியே முத்துராசா ஜிஎஸ் வீட்டு ஒழுங்கைக்குள்ளால விடு"
நீண்ட நாட்களின் பின்னர் வவுனியா வந்ததில் ஊர் சுற்றிப் பார்க்கும் நிகழ்ச்சி நிரலின்படி நண்பன் திவாவுடன் மோட்டார் சைக்கிளில், குருமன்காடு நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம்.

குருமன்காட்டுச்சந்தி காளிகோவில் தொண்ணூற்று ஆறில் சிறியதாக இருந்தது. குருமன்காடும் அப்போது சனப்புழக்கம் குறைவாயிருந்தது. அடுத்த இரண்டு வருடத்தில் வவுனியாவிலேற்பட்ட சடுதியான மாற்றத்தை அப்படியே வெளிப்படுத்தியது குருமன்காடுதான். ஊருடன் கோவிலும் பார்க்கப் பார்க்க வளர்ந்து கொண்டிருந்தது.

சந்தியிலிருந்து தாண்டிக்குளம் போகும் வீதி. நாங்கள் சதாகாலமும் சைக்கிள்களில் திரிந்த வீதி. காளிகோயில் கடந்து, சற்றுத் தள்ளிச் செல்ல, கைப் பம்ப் அடிக்கும் குழாய்க்கிணறு இருந்தது. அதற்குப் பின்னாலுள்ள காணியில் ஒரு ஓலை வேயப்பட்ட கொட்டகை. வெள்ளை வேட்டி, நஷனல் அணிந்த வெற்றிலை, பாக்கு வாய் வாத்தியார் சிங்களம் படிப்பித்துக் கொண்டிருப்பார்.

யு.என்.எச்.சி.ஆர். அலுவலகம், கே.டி பி.எம் கணினி நிலையம் கடந்தபின், இடப்பக்கமாகத் திரும்பிச் செல்லும் அந்த ஒழுங்கை. அது முத்துராசா விதானையார் வீட்டு லேன் என்றே அழைக்கப்பட்டு வந்தது. ஒழுங்கைக்குள் சென்றதுமே வலது பக்கம் திரும்பி நேராகப் போனால் பிள்ளையார் கோவிலுக்குச் செல்லலாம். போகிற வழியில் இடையில் இடதுபக்கமாகச் செல்லும் இன்னொரு ஒழுங்கையில் தெரியும் மாடி வீடு முத்துராசா விதானையார் வீடு.

அப்படியே அங்கேயே பார்த்துக் கொண்டே வந்தீர்களேயானால், வழியில் இருக்கும் கிண்ணக் குழிகளில் சைக்கிள் இறங்கிவிடும். நாலைந்து பெரிய கிடங்குகளும், ஏராளம் சிறு குழிகளும்.

மின்சாரம் தடைப்பட்ட இரவு நேரத்திலும் சைக்கிளை கிடங்குகளுக்குள் விட்டு விடாமல், வேகமாக, இலாவகமாக வளைச்சு, சுழிச்சு ஓடினீர்கள் என்றால் உறுதியாகச் சொல்லிவிடலாம். நீங்களும் எங்கள் ஏரியாக்காரர்தான். பகலிலேயே தட்டுத் தடுமாறி, தொண்ணுறாம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் அன்ரிமார் முதன்முதளில் சைக்கிள் ஒடும்போது கொடுத்த 'எஃபெக்டில' ஹாண்டிலை இறுகப்பிடித்து, வெட்டி வெட்டி தடுமாறியபடி வந்தீர்களானால், நீங்கள் ஏரியாவுக்குப் புதுசு.

கவனிக்காமல் வேகமாக வந்தால் கதை கந்தலாகிவிட வாய்ப்புண்டு. எக்கச்சக்கமாகக் கண்ட இடத்திலும் அடிவாங்கித்தான் கடக்க நேரிடும். மற்றபடி, உங்கள் சைக்கிளின் நிலையைப் பொறுத்து சைக்கிளுக்கு எதுவுமே நடக்காமல் போகலாம். செயின் கழன்று விடலாம். அல்லது ‘லொட லொட’வென்று சத்தம் வரலாம். அல்லது இன்னதென்று தெரியாத கோளாறாகிவிடலாம்.

அப்படியேதுமானால், கவலையே படாதீர்கள். அப்படியே பெடலை மிதிக்காமல் அமர்ந்திருந்தீர்கள் எனில், சைக்கிள் ஓரிடத்தில் தானாக ஓய்வுக்கு வரும் பாருங்கள். அங்கே இருக்கிறது நம் சசியண்ணனின் சைக்கிள் கடை! அந்தக் கடையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தை நினைத்து அவ்வப்போது வியந்துபோவதுண்டு.

சசியண்ணனின் கடையில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா கடை’ என்கிற அறிவிப்புப் பலகை மட்டும்தான் கிடையாதே தவிர, பெட்ரோமாக்ஸ் லைட் உட்பட, பல பொருட்கள் குவிந்து கிடக்கும். சைக்கிள் திருத்திறது, கழுவிப்பூட்டுற நேரம் தவிர அண்ணன் பிரித்து வைக்கப்பட்ட ஒரு பெரிய ரேடியோ பெட்டிக்குள்ளோ, ஸ்பீக்கர் பெட்டிக்குள்ளோ தலையைக் கொடுத்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பார். அங்கேதான் சங்கர் அநேகமான நேரங்களில் நிற்பான். சசியண்ணனின் பிரதான சிஷ்யன் போலவே ஆர்வமாகக் கவனித்துக் கொண்டிருப்பான்.

அதன் விளைவாகவோ என்னவோ அப்போதெல்லாம் அவன் 'அம்ப்ளிஃபயர்' என்கிற வஸ்து பற்றியே அதிகம் பேசிக்கொண்டிருந்தான். அக்காலகட்டத்தில் பலரும், அவனுடன் பேச்சுக் கொடுப்பதைக் கூடுமானவரை தவிர்த்துக் கொண்டிருந்தார்கள். எந்த விஷயமானாலும், சாதாரணமாக ஆரம்பித்து இரண்டாவது வாக்கியம் வரை ஒழுங்காகப் பேசுவான். மூன்றாவது வாக்கியத்தின் முடிவில் எப்படியோ அம்புளிவயருக்குக் கனெக்சனைக் கொடுத்துவிடுவான் பிறகு அம்புளிவயர்தான் பேசும்! இதனால் காதைப் பொத்திக் கொண்டு ஓடத்தலைப்பட்டார்கள் ஏரியா நண்பர்கள்.

சசியண்ணனின் கடையில் சங்கரை விட இன்னும் இரண்டு, மூன்று அண்ணன்கள் நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். மிகத்திருத்தமாக ஆடையணிந்து தலைவாரிக் கொண்டு, வாசனைத் திரவியம் தெளித்து கொஞ்சம் ‘களேர்ஸ்’ காட்டிக் கொண்டு நிற்கும் அவர்களை "வெட்டிப் பயலுகள்! கோஸ் பாக்கிறதுக்கு இங்க வந்து நிக்கிறானுகள்" - என இரகசியமாக அறிமுகப்படுத்தினான் சங்கர். யாழ்ப்பாணத்தின், தொன்று தொட்டு காதலிகள், அழகான பெண்களை அழைக்கும் 'சரக்கு' என்கிற பாரம்பரியக் குறிசொல் வவுனியாவில் 'கோஸ்' என்கிற வார்த்தையாகப் பரிணமித்திருந்தது.

சசியண்ணன் ஒரு ஜென்குரு மாதிரி. தன் வேலையிலேயே முழுக்கவனமாக, ஒரு தீவிரமான போக்கில் எதையாவது ஆராய்ந்துகொண்டிருப்பார். அநேகமாக மில்லேனியம் ஆரம்பிக்கும்போது சசியண்ணன் இந்த உலகுக்கு ஏதோவொரு ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்திவிடுவார் என்பதாக சங்கர் பூடகமான உடல்மொழியில் வெளிப்படுத்தினான். அவன் அவ்வப்போது பூடகமாகவே எதையும் பார்ப்பான், பேசுவான். நம்ப முடிந்தது. ஆனால் சசியண்ணன் எந்த சலசலப்புக்கும் சலனமடைவதில்லை. யார் வெட்டிப் பேச்சையும் சட்டை செய்வதில்லை. அமைதியாகக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருப்பார். சிலசமயங்களில் இலேசாகப் புன்னகைப்பார். எங்களுக்கு ஏதோ புரிவது போலிருக்கும். வெகுசில சமயங்களில் ஓரிரு வார்த்தைகள் பேசுவார். அநேகமாகப் புரியாது!

சசியண்ணனின் கடையருகேதான் சங்கரின் பிரிக்கமுடியாத நண்பர்களான நிமாலும், வேகாவும் அறிமுகமானார்கள். மதிலோடு ஒட்டி நிறுத்திய சைக்கிளில் கால்களிரண்டையும் பாரில் வைத்து குந்தி அமர்ந்திருந்த நிமால், எங்களைக் கண்டதும் காலை வீசிப்போட்டு இறங்கி வந்தான். எண்ணெய் வைத்து உச்சிபிரித்து ஒருபக்கமாக படிய வாரிய தலையும், நெற்றியில் மூன்று அடர்த்தியான வீபூதிக் கோடுகளும், சந்தன குங்குமமும் துலங்க, இரு காதுகளிலும் மஞ்சள் பூ வைத்து ஒரு பழம்போலக் காட்சியளித்தான்.

அறிமுகப்படுத்தியதும், ஒரு ஆங்கிலக் கனவான் போன்ற தோரணையில் ரெஸ்பெக்டாக ஹாய் சொல்லிக் கைகுலுக்கினான். அப்படியொரு வழக்கம் எங்களிடையே இல்லாத காலப்பகுதி என்பதால் புதுமையாக இருந்தது. நிமால் எப்போதும் நகைச்சுவையாகப் பேசுவான். சுற்றியிருப்பவர்களில் ஒருசிலர் சிரிப்பார்கள். எப்போதாவது சீரியசாகப் பேசுவான். எல்லோரும் குபீரென்று சிரிப்பார்கள். ஆக, அவன் பகிடி விடுறானா, சீரியஸா பேசுறானா என்பது குறித்து அவனுக்கே குழப்பமாக இருந்தது.

வேகா எப்போதும் பேப்பர் மார்ட்டின் ஷேர்ட் அணிந்து உள்ளே கைவைத்த பனியன் சகிதம், நாங்கள் வன்னி ஸ்டைல் என அழைத்துக் கொண்டிருந்த பக்கிள் வைத்த பிரபுதேவா ஸ்டைல் ட்ரவுசர் அணிந்து இன் பண்ணி பெல்ட் கட்டி டிப் டொப்பாக இருப்பான். சீப்பு படாத தலை, டி ஷர்ட்டில் அலையும் நான், "தம்பி என்ன ப்ளான்? என்ன நடக்குது? உம்மட போக்கு சரியில்லையே? பேஸுக்கு வந்து சந்தியும் ஒருக்கா" இயக்கத் தோரணையுடன் கேட்பது வழக்கம். சிரித்துக் கொள்வான். அவன் இயல்பில் சற்று அமைதியானவன்.

அபூர்வமாக ஒருநாள் வேகா கையில் ஓர் கொப்பி இருந்தது. அதில் அழகான குண்டுக் கையெழுத்தில் நிறையக் கவிதைகள் எழுதி வைத்திருந்தான். அவனுக்குக் கவிதை எழுதும் கெட்ட பழக்கம் இருந்தது தெரிந்துபோனது. ஆனாலும் பெரும்பாலான கவிதைத் தொற்றுக்கு ஆளானவர்கள் போல "மச்சான் கவிதை எழுதிருக்கிறன் வாசிச்சுப்பார்" என்கிற நோயறிகுறிகள் அவனிடம் இல்லாததால் நட்பாயிருப்பதில் எந்த அபாயமும் இருக்கவில்லை. தவிர ஒவ்வொரு பாட குறிப்புப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் ஏதாவது கோர்ட்ஸ் மாதிரியான ஆங்கில குறிப்புகள் எழுதும் வழக்கம் அவனுக்கிருந்தது. Honesty is the best policy, Diamond cut diamonds என்பதாக இருக்கும். பொதுவாக பெண்களே இந்தமாதிரி எழுதி வைத்திருப்பதைக் கவனித்திருக்கிறேன். அவன் அக்காக்களிடமிருந்து கூடத் தொற்றியிருக்கலாம்.

அப்போது சாதாரணதரப் பரீட்சைகள் முடிந்த ஒரு நீண்ட பள்ளி விடுமுறைக்காலம். சங்கர், நிமால், வேகா மூன்று பேரும் எப்போதுமே ஒன்றாகவே சுத்திக் கொண்ருப்பார்கள். ஒருமுறை பிள்ளையார் கோவில் திருவிழாவில் வில்லுப்பாட்டுக்கூட செய்தது இந்தக் கோஷ்டி. நானும் வேடிக்கை பார்க்கச் சென்றிருந்தேன். ஏரியா நண்பர்கள் என்கிறவகையில் அவர்களுடன் அவ்வப்போது காலை வேலைகளில் மட்டும் ஒன்றாகத் திரிந்தேன்.

மாலை நேரங்களில் வழமையான வைரவர் புளியங்குள வீதி 'சில்ட்ரன் பார்க்' சந்திப்பு எனது வழமையான நண்பர்களுடன் என இடைவிடாத பணிகளுக்கு மத்தியில் வாழ்ந்த காலம். ஏரியா நண்பர்கள் சந்திப்பு அநேகமாக சசியண்ணை கடையில் சந்திப்பு நிகழும். சிலசமயம் பிள்ளையார் கோவிலுக்கு முன்னால். அரட்டை தவிர அவ்வப்போது நிமால் தலைமையில், பரிசோதனை முயற்சியாக வீட்டில் நாங்களே ரொட்டி சுட்டு சாப்பிடுவது போன்ற, எதிர்கால நலன்கருதிப் பயனுள்ள பொழுதுபோக்குகளிலும் ஈடுபட்டு வந்தோம்.

பிள்ளையார் கோவிலடியில் சைக்கிள்களில் அமர்ந்தபடியே பேசிக்கொண்டிருந்த ஒரு காலைப்பொழுது. கோவிலில் கட்டுமான வேலைகள் நடந்துகொண்டிருந்தன. முன்புறம் அகழ்ந்தெடுக்கப்பட்ட செந்நிறமும் வெண்மையும் கலந்த கற்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. நிமால் ஏதோ நினைத்துக் கொண்டவன் போல ‘கொஞ்சம் பொறு வாறன்’ என்று போனான்.

கற்குவியலில் எதையோ தேடினான். இரண்டு கற்களைத் தேர்ந்தெடுத்து இரு கைகளிலும் வைத்து மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தவன் ஒன்றைக் கீழே போட்டுவிட்டு அப்படியே அருகிலிருந்த குழாய்க்கிணற்றடிக்குச் சென்றான். சங்கர் கைப் பம்பினால் நீர் இறைக்க, சுத்தமாகத் தேய்த்துக் கழுவினான்.கோவிலுக்குள்ளிருந்து இரண்டு பலகைத் துண்டுகள், ஒரு சிறிய சோக் பீஸ் கொண்டு வந்தான். சங்கர் ஒரு சிறிய பொட்டலம் கொண்டுவந்தான். ‘போவமடா’ என்றான் நிமால்.

அப்படியே குருமன்காடு வீதியில் காளிகோயில் பக்கமாக சென்றோம். முத்துராசா விதானையார் வீட்டுக்குத் திரும்பும் அந்த ஒழுங்கைக்கு எதிரே சற்றுத்தள்ளி இந்தப்பக்கமாக சைக்கிளை நிறுத்தினார்கள் நிமாலும், சங்கரும். வீதியின் மறுகரையில் ஒழுங்கைக்கு அருகில் அருகில் நானும், வேகாவும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். சங்கரின் உதவியுடன் நிமால் வேலியோரமாக இலைதழைகளை சுத்தப்படுத்தி அருகிலிருந்த கற்களைக் கொண்டு ஒரு செட்டப் செய்தான்.

பலகை ஒன்றை நிழலுக்குக் கொடுத்து, கோவிலில் தேடிக் எடுத்துக் கொண்டு வந்த கல்லை பயபக்தியுடன் பத்திரமாக வைத்தான். சரியாகச் சொன்னால் பிரதிஷ்டை செய்தான். பொட்டலத்திலிருந்த வீபூதியை 'சுவாமி'க்கு அணிவித்து, வேலியோரம் இருந்த செம்பருத்திப் பூக்கள் பறித்து வைத்தான். இன்னொரு பலகையில் சோக் துண்டினால் எழுதினான், 'தேடி வந்த பிள்ளையார்'. இவ்வளவுக்கும் நாங்கள் யாரும் பேசிக்கொள்ளவில்லை. மௌனப்படம் போலவே எல்லாம் நிகழ்ந்தது. நிமால் எங்களுக்கு விபூதிப்பிரசாதம் கொண்டு இந்தக்கரைக்கு வந்தான்.

அதே நேரம் பார்த்து, சற்று வயதான அருகிலிருந்த வீட்டுப் பெண்மணி வெளியே வந்து நம் பிள்ளையாரை ஆச்சரியமாக பார்த்தார். எங்களையும் பார்த்தார். இதைக்கவனித்ததும், நாங்கள் சைக்கிளை விட்டிறங்கி மிகுந்த பயபக்தியுடன் வீபூதி வாங்கிப் பூசிக் கொண்டோம்.

இப்போது அதைப் பெண்மணியும் பிள்ளையாரிடம் பிரார்த்தித்தார். "மச்சான் பிள்ளையாருக்கு முதலாவது கஸ்டமர் கிடைச்சாச்சு" என்றான் வேகா. நிமால் திரும்பிச் சென்று, அந்தப் பெண்மணியிடம் தீவிரமாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அநேகமாக அது நம் தேடிவந்த பிள்ளையாரின் வரலாறாக இருக்கவேண்டும்.

சற்று நேரம் எங்களுக்குச் சம்பந்தமில்லாததுபோல நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

"ஹம்சா வாறாள்டா!" என்றான் வேகா திடீரென்று. தூரத்தில் சைக்கிளில் வந்துகொண்டிருந்த பெண்ணை இங்கிருந்தே கழுகுப் பார்வையில் இன்னார்தான் என்று சொன்ன அவன் திறமை வியக்க வைத்தது. "பயங்கர களேர்ஸ்டா" என்று மேலதிக விவரமும் சொன்னான். நிமால் அவசரமாக வீதியைக் கடந்து பிள்ளையாரின் எதிரே போய் நின்றுகொண்டான்.

"அவள் கணக்கெடுக்கவே மாட்டாள்" என்றான் சங்கர்.

அவள் அருகே வரும் நேரம்பார்த்துச் சரியாக நிமால் மிகுந்த பயபக்தியுடன் கண்களை மூடி முணுமுணுத்து வேண்டிக் கொண்டான். நீண்ட தோப்புக் கரணம் போட்டுக் கொண்டான். அந்தப் பெண்ணிடம் சிறு சலனம்கூட இல்லை. அங்கே மனிதர்கள் நிற்பதாகவோ, யாரையும் கவனித்ததாகவோ அவளிடம் எந்தச் சிறு வெளிப்பாடுமில்லை. ஒழுங்கைக்குள் சென்றுவிட்டாள்.

இந்தப்பக்கம் வந்துவிட்ட நிமால் மட்டும் 'அவள் பாத்தவள்டா' என்றான். நம்புவதுபோலில்லை என்றாலும் அது குறித்து யாரும் விவாதிக்கவில்லை.

அன்று அபூர்வமாக, மாலையே வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். எல்லாம் நம் பிள்ளையார் பற்றிய ஆர்வம்தான். பிள்ளையார் கோவில் எதிரே வீதிக்கு இந்தப்பக்கமாக மூவர் கூட்டணி நிற்பதைப்பார்த்து அவர்களுடன் சேர்ந்துகொண்டேன். பேசியபடியே நேரம்போனதில் இருட்டியிருந்தது. சங்கர் மெதுவான குரலில், 'டேய் அங்க பார்ரா' என்றான்.

ஹம்சா அவள் அம்மாவுடன் மிடுக்காக நடந்து வந்துகொண்டிருந்தாள். 'எங்கடா நடந்து வாறாள்?' மேலும் அச்சரியமாகக் கேட்டுக் கொண்டான். இந்தப்பக்கம் நின்ற எங்களைக் கண்டுகொள்ளாமல், வீதியைக் கடந்து இருவரும் நம் 'தேடி வந்த பிள்ளையாரி'டம் சென்றார்கள். நம்பமுடியாத அதிர்ச்சி.

எங்களுக்குதான் அது எதிர்பாராத ஆச்சரியம்! நிமால் எல்லாம் அவன் திருவிளையாடல் என்பதுபோல அமைதியாயிருந்தான். ஆனால் அங்கே பிள்ளையார் இருந்திருந்தால் நிச்சயம் அவருக்கும் ஆச்சரியமளித்திருக்கும். வெகு பவ்வியமாக நின்று கும்பிட்டாள் ஹம்சா. அன்றுதான் அவளை அப்படியொரு பணிவுடன் பார்ப்பதாக மிகமுக்கிய தகவல் ஒன்றைத் தெரிவித்தான் வேகா.

ஹம்சா கண்மூடிப் பிரார்த்தித்தாள். மிக இலேசாக, ஒரு டென்னிஸ் பந்து ஓய்வுக்கு வருமுன் கொடுக்கும் சிறிய ‘ஜம்ப்’ போல நாசூக்கான 'போனால் போகுது' தோப்புக்கரணம் மூன்றைப் பிள்ளையாருக்குப் பெரிய மனது பண்ணி வழங்கினாள். மீண்டும் அதே மிடுக்குடன் கடந்து சென்றாள்.

அதுவரை மிகுந்த பிரயத்தனத்துடன் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த சிரிப்பை மேலும் அடக்க முடியவில்லை. ஆனாலும் ஆச்சரியம் தாங்கவில்லை. எப்பிடிடா? அமைதியாக இருந்த நிமால் சொன்னான்,

"இனிப் பிள்ளையாரைத் தூக்கிடலாம்டா!"

சரியாக நிமால் பிள்ளையாரைத் தூக்கப்போகும் நேரம் பார்த்து, அங்கே தோன்றினர் நம் பிள்ளையாரின் முதல் பக்தை. அநேகமாக அவர் சாயங்காலப் பூசைக்காக வந்திருக்க வேண்டும்.

"என்னதம்பி செய்யப்போறீர்?"

"அதில்லையம்மா தெரியாதே எங்கடையாக்கள் செய்யயிற வேலை.. ரோட்டில, ரயில் தண்டவாளத்தில எண்டு கண்ட கண்ட இடத்தில எல்லாம் கோயிலக் கட்டீனம். பப்ளிக்க டிஸ்டப் பண்றது... விளங்காம அவையள் செய்யிற அதே பிழையள நாங்களும் செய்யக்கூடாது என்ன..."

மிகுந்த பொறுப்புணர்வுடன் நிமால் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

அதோ அங்கேதான் தேடிவந்த பிள்ளையார் ஒருநாள் மட்டும் வீற்றிருந்தார். இப்போது ஒழுங்கைக்குள் திரும்பியிருக்கிறோம். அந்தக் கிண்ணக்குழிகள் எப்போதோ நிரவப்பட்டு தார் ரோடாக மாறியிருந்தது. சசியண்ணையின் சைக்கிள் கடை இருந்த அடையாளம் தெரியவில்லை. குருமன்காட்டுப் பிள்ளையார் கோவிலடியில் சந்துரு வீட்டுக்கு முன்பாக நின்று கொண்டிருந்தோம்.

நிமால் இப்போது கனடாவில் இருப்பதாகச் சொன்னார்கள். சங்கர் யாழ்ப்பாணத்தில். "மச்சி வேகா எங்கடா?" திவாவிடம் கேட்டேன்.

"யார் மதனையா கேக்கிறே"
"ஆமாடா மதன்... இப்பதான் ஞாபகம் வருது வீட்ல அப்பிடித்தான் கூப்பிடுறதா சொல்லுவான்"
"டேய்.. அதாண்டா பிறகு ஊருக்கே தெரிஞ்ச பேர்.. உனக்குத் தெரியாதா? அவனை அப்பவே போட்டுட்டாங்கடா!

போடுறது என்பது யாழ்ப்பாணத்திலோ, வவுனியாவிலோ அவ்வளவு அதிர்ச்சியை கொடுக்கும் சொல் அல்ல என்றாலும் அவனைப்போய்..

"ஏண்டா? யாரு?"
"அவன் பெருசுடா!"

குருமன்காட்டுப் பிள்ளையார் கோவிலில் ஏதோ கட்டட வேலை நடந்துகொண்டிருந்தது. எப்போது சென்றாலும் அங்கே வேலை நடந்துகொண்டிருக்கிறதைப் பார்க்கிறேன். கடைசியாக தொண்ணூற்றெட்டில் வவுனியாவை விட்டுப் புறப்பட்டபோது, மீண்டும் ஓரிருமுறை சென்ற போது, கடந்தவருடம் சென்றபோதும். இப்போது நீங்கள் இதனை வாசிக்கும்போதுகூட நடைபெறலாம். நீங்கள் வவுனியாவிலிருந்தால் எதற்கும் ஒருமுறை குருமன்காட்டுப் பிள்ளையார் கோவில் பக்கம் சென்று பாருங்கள்.

(டிசம்பர் 2014)

0 Responses to குருமன்காடு! (ஜீ உமாஜி) | "மச்சான் இப்ப எங்கடா போறம்?"

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com