Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் வெற்றியடைந்து, தமிழர்களின் அரசியல் நம்பிக்கைகளில் ஒளிதீபம் பிறக்க, இந்த தீபாவளி தினத்தில் பிரார்த்திப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி தினத்தையிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:

“உலகுக்கு கதிரவன், சந்திரன் ஆகிய கோள்கள் ஒளி தருகின்றன. இவற்றைவிட மனிதர்களால் ஏற்றப்படும் விளக்குகளும் இருளை விலக்கி ஒளியைத் தருகின்றன. விளக்கு என்பதை தீபம் என்றும் அழைப்பர். இத் தீபங்களை வரிசையாக ஏற்றும்போது அதனை ஆவளி (வரிசை) என்று கூறுவர். எனவே, தீபங்களை வரிசை வரிசையாக அடுக்கி எண்ணெய் அல்லது நெய் விட்டு அவற்றைப் பிரகாசமாக ஒளிர விடும்போது, அவை மக்கள் மனங்களில் இருளாக உள்ள கோபம், குரோதம், அகங்காரம், பொறாமை மற்றும் பிற தீய எண்ணங்களை அகற்றுமென்பது தமிழர்களின் ஐதீகம்.

தீபாவளிப் பண்டிகை, இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்றாகும். இறைவனிடம் சக்தி பொருந்திய வரத்தைப் பெற்றுக்கொண்ட நரகாசுரன் என்னும் அரக்கன், மக்களுக்கும் தேவர்களுக்கும் துன்ப துயரங்களைச் செய்பவனாகவும், பெரும் அச்சுறுத்தலானவனாகவும் விளங்கினான். அவ்வாறு துன்பங்களை அனுபவித்த தேவர்கள் நரகாசுரன் எனும் அரக்கனிடமிருந்து தம்மைக் காப்பாற்றுமாறு இறைவனிடம் வேண்டுகோள் விடுத்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கமைய இறைவனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டான். அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தையே தீபாவளியாக இந்துக்கள் கொண்டாடுகின்றனர்.

இத் தீபாவளித் திருநாளானது ஐப்பசி மாதத்து அமாவாசைக்கு முன்தினமான சதுர்த்தசி தினத்தில் கொண்டாடப்படுகின்றது. இவ்விழாவின் பொருட்டு எமது நாட்டில் மட்டுமல்ல, இந்தியா, நேபாளம், மியன்மார், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளிலும் அரசு விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளமை இத் திருநாளின் சிறப்புக்குச் சான்றாகும்.

இடப்பெயர்வுகள், அகதி வாழ்க்கை, வாழ்வாதாரப் பிரச்சினைகளால் துன்ப, துயரங்களை அனுபவித்து வந்த எமது மக்கள், அவற்றிலிருந்து விடுபட்டு சம அந்தஸ்துடன் கூடிய உரிமைகளுடன் வாழ வேண்டும். இதற்காக இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் வெற்றிபெற வேண்டும். அனைத்து மக்களும் இன, மத வேறுபாடுகளின்றி ஒருமித்த நாட்டில் ஐக்கியமாக சாந்தி, சமாதானத்துடன் வாழ இத் தீபாவளித் திருநாள் வகைசெய்ய வேண்டும். இதற்காக எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி, இந்நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் தொப்புள் கொடி உறவுகளுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றுள்ளது.

0 Responses to தமிழர்களின் அரசியல் நம்பிக்கைகளில் ஒளிதீபம் பிறக்க வேண்டும்: தீபாவளி வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.