Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேர்தல்களில் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் மேற்கொள்ளும் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய திருத்தச் சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் தற்போதைய தேர்தல் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஏகமனதான அங்கீகாரத்தை வழங்கியிருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் அல்லது பொதுத்தேர்தல் ஆகியவற்றில் செலவுகள் கட்டுப்படுத்தப்படவுள்ளன.

தேர்தலை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்தும் பொருட்டு ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்திருப்பதாக மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

தேர்தல்களின் போது வேட்பாளர்களும் அவர்கள் போட்டியிடும் கட்சியும், சுயேச்சைக் குழுக்களும் வரம்புக்கு மீறிய வகையில் பணத்தைச் செலவழிப்பதால், வாக்காளர்கள் ஒரு வித அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அயல் நாடான இந்தியாவில் தேர்தல் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்கள் கலப்பு முறையில் நடைபெறவிருப்பதால், நியாயமாகவும் சுதந்திரமாகவும் வாக்காளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, வசதி படைத்தவர்கள் கூடுதல் பணத்தை வாரியிறைக்கும்போது பண வசதி இல்லாதவர்கள் தேர்தல்களில் பின்னடைவைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது என்று ஜனாதிபதி தமது அமைச்சரவைப் பத்திரத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்களில் சுயேச்சைக் குழுக்களும் அரசியல் கட்சிகளும் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனினும், அவை விரும்பியவாறு பணத்தைச் செலவழிக்க முடிவதில்லை. அதனால், பணம் படைத்தவர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கத்தில், கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கும் நிதி உதவி அளிக்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் தமது செல்வாக்கைச் செலுத்த முயற்சிக்கின்றனர். இது ஜனநாயகக் கட்டமைப்பிற்கு எதிரான செயற்பாட்டுக்கு வழிவகுக்கும். அதேநேரம், இது ஊழல்களை ஊக்குவிக்கவும் ஏதுவாக அமைந்து விடுகிறது. எனவே, தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியமாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து சட்ட திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. அவ்வாறு சட்டமாக்கப்பட்டதன் பின்னர், அதனை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கைக எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

0 Responses to கட்சிகள், சுயேட்சைக்குழுக்களின் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்த புதிய திருத்தச் சட்டமூலம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.