Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப் பட்ட மியான்மாரின் றோஹிங்கியா முஸ்லிம்களின் மாநிலமான ராக்கைனுக்கு மனிதாபிமான உதவிகள் சென்று சேர்வதற்காக றோஹிங்கியா போராளிகளால் பிரகடனப் படுத்தப் பட்ட ஒரு மாதத்துக்கான யுத்த நிறுத்தம் முடிவுக்கு வருவதாக மியான்மார் அரசு அறிவித்துள்ளது. றோஹிங்கியா போராளிகள் சமாதானத்துக்கு இன்னமும் தயாராகவே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

திங்கட்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ள இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் குறித்து றோஹிங்கியா போராளி அமைப்பான ARSA இதுவரை எந்தக் கருத்தும் வெளியிடவில்லை எனினும் தமது றோஹிங்கியா மக்களுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் வன்செயலைத் தடுப்பது எமது கடமை என்று தெரிவித்துள்ளது. மேலும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு மியான்மார் அரசு முன்வருகையில் ARSA அமைப்பு அதை வரவேற்று முன்னெடுத்துச் செல்லும் எனவும் அக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.

ARSA இன் கருத்துக்கு இதுவரை அரச தரப்பில் எக்கருத்தும் வெளியிடப் படவில்லை. எனினும் முன்னதாக தீவிரவாதிகளுடன் சமரசமாகச் செல்ல எமக்கு எந்த கோட்பாடும் கிடையாது என்றே மியான்மார் அரச பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். ஆகஸ்ட் 25 இல் ARSA போராளிகள் பாதிக்கப் பட்ட றோஹிங்கியா கிராமத்தவருடன் இணைந்து 30 பாதுகாப்புப் பாசறைகள் மற்றும் இராணுவ முகாம் ஒன்றின் மீது தொடுத்த தாக்குதலில் 10 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டிருந்தனர். இதற்குப் பதிலடியாக ராக்கைன் மாநிலத்தின் வடக்கே மியான்மார் படைகள் தொடுத்த தாக்குதலில் அரை மில்லியன் றோஹிங்கியா கிராமத்து மக்கள் பங்களாதேஷுக்கு இடம்பெயர நேரிட்டதுடன் இச்சம்பவத்தை இனவழிப்பு என ஐ.நா  விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தாக்குதலில் 500 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டதை மறுத்த மியான்மார் அரசு இதில் பலர் தீவிரவாதிகள் என்றே தெரிவித்திருந்தது.

ஆனால் பிறநாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களுடனான தொடர்பை நிராகரித்த ARSA தமது மக்கள் மீது மியான்மார் அரசு வன்முறை, கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் வீடுகளுக்குத் தீ வைத்தல் என இனவழிப்பைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருந்த மியான்மார் அரச தலைவர் ஆங் சான் சூ குயி மீது அண்மைக் காலமாக மியான்மாரில் அவர் வன்முறைகளைத் தடுக்கத் தவறி விட்டார் என சர்வதேசம் விமர்சனங்களை முன் வைக்கத் தொடங்கியதுடன் மியான்மார் அரசு மீதான அழுத்தங்களையும் அதிகரித்திருந்தது.

இதை அடுத்து 1993 ஆம் ஆண்டு ஒப்பந்தப் படி அகதிகளை அடையாளம் காணும் முறைப்படி பங்களாதேஷில் இருந்து தமது அகதிகளை மீளப்பெற மியான்மார் அரசு சம்மதம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to றோஹிங்கியாக்களுடன் யுத்தநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருகின்றது மியான்மார்

Post a Comment

Followers