Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சனிக்கிழமை பாரிஸில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர்பிரான்ஸின் ஏர்பஸ் ஏ 380 ரகத்தைச் சேர்ந்த AF66 என்ற விமானம் கிறீன்லாந்து வான்பரப்பின் மீது பறந்து கொண்டிருக்கும் போது அதன் 4 எஞ்சின்களில் ஒன்று பழுதானது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட விமானிகளின் சமயோசிதத்தினால் பழுதான எஞ்சின் விரைந்து நிறுத்தப் பட்டதுடன் ஏனைய 3 எஞ்சின்களின் துணையுடன் சுமார் ஒரு மணிநேரம் பயணித்து கனடாவின் லாப்ரடரில் உள்ள கோஸ் பே விமான நிலையத்தில் பத்திரமாக இறக்கப் பட்டது.

இச்சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 496 பயணிகளுக்கும் 24 பணியாட்களுக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என ஏர்பிரான்ஸ் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். காற்றாடியில் ஏற்பட்ட பழுதால் எஞ்சின் செயல் இழந்த போது ஏற்பட்ட பலத்த சத்தத்தினால் பயணிகள் அச்சமடைந்ததாகக் கூறப்படுகின்றது. மேலும் சேதமடைந்த இறக்கை மற்றும் எஞ்சின் பகுதிகளை பயணிகள் எடுத்த புகைப் படங்கள் இணையத் தளத்தில் வெளியாகி உள்ளன.

மறுபுறம் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தலைநகர் கின்ஷாசா அருகே உள்ள நிடோலா என்ற விமானப் படைத் தளத்தில் இருந்து சனிக்கிழமை புறப்பட்ட இராணுவ விமானம் விபத்தில் சிக்கியதில் ரஷ்யாவைச் சேர்ந்த குழுவினர் உட்பட 30 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விமானம் நிசெலி என்ற இடத்தி பறக்கும் போது தான் தரையில் விழுந்து நொறுங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இதேவேளை மியான்மாரின் அல் லீ தான் கியாவ் என்ற இடத்திலிருந்து கடற்பகுதியினூடாக நாஃப் நதியின் முகத்துவாரத்தை அடைந்து அங்கிருந்து வங்கதேசம் வர முயன்ற றோஹிங்கியா அகதிகளின் படகும் விபத்தில் சிக்கியதில் 60 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்றும் இதில் 23 பேரின் உடல்கள் மாத்திரமே மீட்கப் பட்டு வங்கதேசத்தின் இனானி கடற்கரைப் பகுதியில் அடக்கம் செய்யப் பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அட்லாண்டிக் கடல் மீது பறக்கையில் எஞ்சின் பழுதான ஏர்பிரான்ஸ் விமானம் பத்திரமாகத் தரையிறக்கம்

Post a Comment

Followers