Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதத்தில் வடக்கு மாகாணம் இராணுவமயப்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் எட்டு பொது மக்களுக்கு ஒரு இராணுவம் என்ற விகிதம் காணப்படுகிறது. யுத்தம் முடிந்து எட்டரை வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளபோதும், தமிழ் மக்கள் இன்னமும் இராணுவத்தின் பிடியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற காணி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் வலுவாதார அபிவிருத்தி, வனஜீவராசிகள் அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பெருமளவு இராணுவத்தினர் வடக்கில் நிலைகொண்டிருப்பதால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான விளைநிலங்களும், மேட்டுக்காணிகளும் அரசாங்கத்தின் துணையுடன் முப்படையினரானலும் கபளீகரம் செய்யப்படுகிறது. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மூன்று வருடங்களுக்குப் பின்னரும் காணிவிடுவிப்பதற்கான போராட்டங்கள் நடைபெறுகின்றதே தவிர, காணிகளை விடுவிப்பதற்கான எவ்வித எண்ணமும் அரசாங்கத்திடம் இல்லை. ஒரு பக்கம் சொற்பமான காணிகள் விடுவிக்கப்பட்டாலும் மறுபுறம் வேறு வழிகளில் காணிகளை சூறையாடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கு- கிழக்கில் இராணுவமயமாக்கல் என்பது புதிய சிங்கள கொலனிகளைப் பாதுகாப்பதற்காகவும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவுமே பயன்படுத்தப்படுகின்றது. காணிகளை விடுவிக்கின்றோம், இராணுவத்தை குறைக்கின்றோம் என்று ஐ.நா. மனிதஉரிமை ஆணையகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகள் எல்லாம் போலி வாக்குறுதிகளாகவே உள்ளன. யுத்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்ந்தும் அவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளார்கள்.

இராணுவத்தினரின் தேவைக்காகவும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகவும் பல ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகிறது. மக்கள் காலம் காலமாக அனுபவித்து வந்த காணிகளை வன இலாகா தனது காணிகள் என்று அவர்களை உள்நுழைய விடாமல் தடுக்கிறது. இதனால் காலாதிகாலமாக தமது காணிகளில் பயிரிட்டு வந்த மக்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றனர்.

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் இடைத்தங்கல் முகாம் இருந்த இடத்தை இராணுவத்தினருக்குக் கொடுப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. இதனை நிறுத்தி ஏற்றுமதி விவசாய உற்பத்தி மையமாக இதனை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுங்கள். இராணுவம் அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் தமிழ் மக்களின் காணிகளை மீண்டும் தமிழ் மக்களிடம் ஒப்படைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to ஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதத்தில் வடக்கில் இராணுவப் பிரசன்னம்; சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.