Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண மக்களின் தேவைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக மலேசியாவிலிருந்து குழுவொன்றை விரைவில் அனுப்பி வைப்பதாக மலேசியப் பிரதமர் மொஹமட் நஜீப் அப்துல் ரசாக் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த மலேசியப் பிரதமருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. சுமார் 45 நிமிட நேரம் இருவரின் சந்திப்பும் இடம்பெற்றது.

பிரதமருடன் வந்திருந்த அமைச்சர்கள் வைத்திய கலாநிதி சுப்ரமணியம், டாடோ சாமிவேலு, வைத்தியகலாநிதி ஜெயந்திரன் சின்னத்துரை உட்பட அவரின் அலுவலர் குழுவினரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாண மக்களுக்கும் மலேசிய நாட்டுக்கும் இடையில் பாரம்பரியமாக இருந்து வந்துள்ள உறவை வலியுறுத்தினர். இந்தியத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் மலேசியாவில் ஒருமித்து தமிழர்கள் என்றே அழைக்கப்பட்டாலும், இருதரப்பாரின் முன்னோர்களும் வித்தியாசமான பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆங்கிலேயர் காலத்தில் தென்னிந்திய தமிழ் மக்கள் தொழிலாளர்களாக வேலை பார்க்க வந்தார்கள் என்றும், யாழ்ப்பாணத் தமிழர் இலிகிதர் வேலை பார்க்கவே வந்தார்கள் என்றும், கூடிய கல்வித் தகைமைகளைக் கொண்டிருந்த அவர்களின் மூன்றாந் தலைமுறையினரே இன்று தம் நாட்டில் மிக உயர்ந்த பதவிகளை வகிக்கின்றார்கள் என்றும் மலேசியப் பிரதமர் கூறியுள்ளார்.

சுதந்திரம் கிடைத்த காலத்தில் இலங்கையில் சகல தொழிற் துறைகளிலும் பெருவாரியான தமிழர்களே இடம் பிடித்திருந்ததாகவும், அதைப் பொறுக்காத பெரும்பான்மை இன மக்கள் அப்பொழுதிருந்தே தமிழர்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வந்து பாரபட்சம் காட்டி இன்று கைவிட்டு எண்ணக் கூடியவர்களே அரச சேவையில் கடமையாற்றுவதாகவும் கூறினார்.

தமிழர்கள் நவீன மலேசியாவை உருவாக்க முன்னின்றிருந்தார்கள். இன்று அங்கிருந்து அதே புலம்பெயர்ந்தோரின் வாரிசுகள் எம் நிலையை மேம்படுத்த முன்வர வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.

பொருளாதார ரீதியாக உங்களின் வருமானங்கள் என்ன என்று மலேசியப் பிரதமர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவா், எம்மிடம் இருந்து பெறும் வருமானத்தை அரசாங்கம் பொறுப்பேற்று அதில் சுமார் 10ல் ஒரு பங்கையே எமது முதலீட்டு செலவினங்களுக்கு அது தருகின்றது. பெரும் பகுதியை அரசாங்கம் தமது அமைச்சர்கள் ஊடாகவும் அமைச்சுக்கள் ஊடாகவும் தாம் நினைத்தவாறு வடமாகாணத்தில் செயல்திட்டங்களை அமுல்படுத்த பிரயத்தனங்கள் எடுக்கின்றார்கள் என்பதை சுட்டிக்காட்டி எமது தேவைகளை அறிய முற்படாது தமது தேவைகளுக்கு ஏற்ப காய் நகர்த்துகின்றார்கள் என்றும் முதலமைச்சா் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில், 600 ஏக்கர் காணியில் திறந்த மிருகக்காட்சி பூங்காவை அமைக்க மத்திய அமைச்சர் ஒருவர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஐம்பதாயிரம் வரையில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் 11000 வரையில் முன்னாள் போராளிகளும் ஊனமுற்றவர்களும் பல வித தேவையுடன் இருக்கும் போது மிருகக் காட்சிப் பூங்கா அமைக்க விரும்புவது விசித்திரமாக இருக்கின்றது என முதலமைச்சா் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து எவ்வாறான முதலீடுகள் நன்மை பயக்கும் என்று பிரதமர் கேட்டதற்கு விவசாயம், மீன்பிடி, கல்வி, விளையாட்டு, சுகாதாரம், மகளிர் விவகாரங்கள், சுற்றுலா, வீடமைப்பு போன்ற பலவற்றிலும் செய்யக் கூடிய முதலீடுகள் பற்றியும் கூறியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில், 1,39000 வீடுகள் தேவையாயிருந்ததென்றும் 50,000 வீடுகளை ஏற்கனவே இந்தியா தந்துதவியுள்ளது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றாலும் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளதென்றும் அரசாங்கத்தாலும் கட்டப்பட்டு வருகின்றதுடன், இன்னும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வீட்டுத் தேவைகள் இருப்பதாகவும் முதலமைச்சா் சுட்டிக் காட்டியுள்ளார்.

மலேசியாவில் இருந்து விசேட குழுவொன்றை வடக்கு மாகாணத்திற்கு அனுப்புவதாகவும், எந்தெந்தத் துறையில் உதவிகள் புரிய முடியும், முதலீடுகள் செய்ய முடியும் என்பதை அவர்கள் ஆராய்ந்து தமக்குச் சொன்ன பின்னர், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

0 Responses to வடக்கு மக்களின் தேவைகளை ஆராய விரைவில் மலேசியக் குழு; விக்னேஸ்வரனிடம் மலேசியப் பிரதமர் உறுதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com