Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டையும் மக்களையும் நேசிக்கும், ஊழல், மோசடி வீண்விரயம் போன்றவற்றிற்கு ஒரு போதும் தலைசாய்க்காத, நேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே உள்ளுராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இம்முறை தேர்தலுக்காக கூட்டணி சேர்ந்துள்ள 31 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் ‘சுதந்திரத்தின் உடன்படிக்கை’ வெளியிட்டு வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “தேசத்தின் எதிர்காலத்திற்காக தூய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் கட்சி, நிறம் அல்லது குடும்ப உறவுகள் கவனத்திற்கொள்ளப்படமாட்டாது. நாட்டையும் மக்களையும் நேசிக்கும், ஊழல், மோசடி வீண்விரயம் போன்றவற்றிற்கு ஒரு போதும் தலைசாய்க்காத நேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே இம்முறை உள்ளுராட்சித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்பார்ப்பு.

நேர்மையான மக்கள் சார்பு அரசியல் இயக்கத்திற்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்து எதிர்காலத்தில் சிறந்ததோர் அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான வாயிலை இந்த தேர்தலின் மூலம் அடையாளப்படுத்த வேண்டும். அரசியல் செய்யும் எந்த ஒருவருக்கும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இருக்க முடியாது. அவர்களிடம் இருக்க வேண்டியது தேசத்தினதும் மக்களினதும் எதிர்காலத்திற்கான பொது நிகழ்ச்சி நிரலாகும்.

இம்முறை உள்ளூராட்சித் தேர்தலை தொகுதி முறையில் நடாத்துவதற்கு கிடைத்தமை பெரும்வெற்றியாகும். இதன் மூலம் சிறந்த அரசியல் கலாசாரத்திற்கான வழியை ஏற்படுத்த முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளில் இதற்காக அரசாங்கத்திற்குள்ளும் எதிர்க்கட்சிக்குள்ளும் பெரும் போராட்டம் ஒன்றை நடத்தவேண்டி இருந்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட ‘சுதந்திரத்தின் உடன்படிக்கை’ நாட்டினதும் தேசத்தினதும் இன்றிருக்கின்ற மற்றும் நாளை பிறக்கவிருக்கின்ற தலைமுறையின் எதிர்காலத்திற்கான உடன்படிக்கையாகும்.

ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பேணி தேர்தல் சட்டதிட்டத்திற்கு ஏற்ப வன்முறையற்ற, முன்மாதிரியான தேர்தலுக்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இது சிறந்த உள்ளூராட்சி நிறுவனத்திற்காக மக்களுக்கு வழங்கும் செய்தியாகும்.” என்றுள்ளார்.

0 Responses to நேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக் கட்சியின் இலக்கு: மைத்திரி

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.