Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முதலீட்டாளர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாதி அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த இராணுவ தொழில் வளர்ச்சி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது,

“சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. உள்நாட்டு நிறுவனங்களுக்கு பாதுகாப்புத்துறை முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத்தக்கது. தமிழகம் ஆட்டோ மொபைல்ஸ், ஜவுளி, தோல், எலக்ட்ரானிக், ஹார்டுவேர், அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் முன்னிலை வகிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டு வந்திருக்கும் வலுவான தொழில்துறை சூழ்நிலை காரணமாகவும், உயர் தேர்ச்சி, மனிதவளம் பெருமளவில் கிடைப்பதன் காரணமாகவும் இது சாத்தியமாகிறது.

தமிழகத்தில் 70 என்ஜினீயரிங் கல்லூரிகள் மூலம் ஆண்டுதோறும் 5 ஆயிரம் வானூர்தி தொழில்நுட்ப என்ஜினீயர்கள் பட்டம் பெற்று வெளிவருகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள வானூர்தி தொழில்நுட்ப நிறுவனங்களில் நம்முடைய என்ஜினீயர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் ‘தொலைநோக்கு திட்டம் 2023’-ல் வானூர்தி தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வானூர்தி தொழில்நுட்பத்துக்கு தேவையான உதிரிபாகங்களை தயாரிப்பதில் 120 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ராணுவத்துக்கு, அரசுத்துறை நிறுவனங்களுக்கு என்று 700-க்கும் மேற்பட்ட வினியோகஸ்தர்கள் உள்ளனர். ஆட்டோமொபைல் உற்பத்தித்திறனில் தமிழ்நாடு வலுவாக உள்ளது.

அடுத்த இலக்கு வானூர்தி தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறை தான். இந்தியாவில் வானூர்தி தொழில்நுட்பத்துக்கு தேவைப்படும் உபகரணங்களில் 30 சதவீதம் தமிழ்நாடு வழங்கும் விதத்தில் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் உள்ளது. இத்தகைய நடவடிக்கையில் ஒன்று தான் ஸ்ரீபெரும்புதூரில் உருவாகும் சென்னை வானூர்தி பூங்கா.

இந்த பூங்கா முதல்கட்டமாக 250 ஏக்கரில் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டம் 500 ஏக்கர் அளவுக்கு விஸ்தரிக்கப்படும். இந்தப் பூங்காவில் 50 வானூர்தி மற்றும் ராணுவத்துறை நிறுவனங்கள் இடம்பெறும். இதன்மூலம் ராணுவத் துறை கொள்முதல் கொள்கைக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்படும்.

சென்னையில் வானூர்தி பராமரிப்பு, பழுதுபார்ப்பு மைய வளாகத்தை அமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்திலும் தங்களது நிறுவனத்தை ஏற்படுத்தவும், பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் இயக்குபவர்கள் முன்வந்தாலும் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

உத்தேசித்துள்ள மிகவும் மேம்பட்ட கணினி முறை கணக்கீடு, வடிவமைப்பு என்ஜினீயரிங் மையத்தை ரூ.180 கோடி செலவில் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இது 5 லட்சம் சதுர அடியில் உருவாகி வருகிறது. சென்னை வானூர்தி மற்றும் பாதுகாப்புத் துறை பூங்காவில் பன்னாட்டு உற்பத்தி வளாகத்தை நாங்கள் அமைத்து வருகிறோம். இத்தகைய பின்னணியில் தமிழ்நாட்டில் பொருத்தமான ஒரு இடத்தில் ‘ஹால்’ நிறுவனத்தால் அமைக்கப்படும் ஹெலிகாப்டர் தொழிற்சாலை மற்றும் எளிய ரக போர் விமானங்களை அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

சேலத்தில் இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலையை அமைக்கலாம் என்று பரிந்துரை செய்கிறேன். இதேபோல கோவை சூலூர் விமானப்படை நிலையத்தில் ராணுவத்துக்கான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மையத்தை அமைக்க வேண்டும். நடுத்தர, சிறு தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களுக்கு தேவைப்படும் நிலம் மற்றும் கட்டமைப்புகள், மின்சார வினியோகம், இதர வசதிகள் ஆகியவற்றை ஒற்றைசாளர முறையில் வழங்க தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் உதவிடும்.

மாநிலத்தில் சுலபமாக தொழில் தொடங்க ஒரு சட்டத்தையும் தமிழக அரசு சமீபத்தில் இயற்றியுள்ளது. உங்கள் அனைவரையும் அன்போடும் மகிழ்ச்சியோடும் வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் முதலீட்டுக்கு வாருங்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து உதவிகள், ஆதரவை அளிக்க நான் உறுதி கூறுகிறேன்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com