Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமானது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் திருப்தியடையும் வகையில் விசாரணைகளை மேற்கொண்டு, அவர்கள் மனதில் ஆறுதலைக் கொண்டுவரும் வகையில் செயற்பட வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் பிரிவுத் தலைவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் இடையில் கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, ஐயோப்பிய ஒன்றியப் பிரதிநிதியிடம் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாவது, “பயங்கரவாதத் தடைச் சட்டமானது நீக்கப்பட வேண்டிய ஒன்று. இது, இலங்கை அரசாங்கமானது சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்று. இந்தச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். இது தொடர்பில் மேலும் இழுத்தடிப்புக்கள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இராணுவத்தினர் பாவனையிலுள்ள பொதுமக்களின் காணிகள் இன்னமும் மீளளிக்கப்படாமை கவலையளிக்கின்றது. மக்கள் தமது சொந்தக் காணிகளையே விடுவிக்குமாறு போராட்டங்களில் ஈடுபடுகின்றார்கள். இதனைக் காலந்தாழ்த்துவது மக்கள் மனதில் விரக்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது. மக்கள் காலாகாலமாக தாம் வாழ்ந்து வந்த இருப்பிடங்களை விடுவித்துத் தருமாறு நீண்ட காலமாகப் போராடி வருகின்றார்கள். இந்த நியாயமான கோரிக்கையைப் புறந்தள்ள முடியாது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமானது தனது செயற்பாடுகளை விரைவாக ஆரம்பித்து நியாயமான விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மை நிலையினை வெளிக்காட்ட வேண்டும். நீண்டநாட்களாகப் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் உறவுகளுக்கு தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரித்து உண்டு. அந்த உரிமையினை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் நிலைநாட்ட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமானது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் திருப்தியடையும் வகையில் விசாரணைகளை மேற்கொண்டு அவர்கள் மனதில் ஆறுதலைக் கொண்டுவரும் வகையில் செயற்பட வேண்டும்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் முடிந்ததன் பிற்பாடு புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு புதிய அரசியலமைப்புக்கான வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த நடவடிக்கை மேலும் தாமதப்படுத்தப்படலாகாது. நீண்டகால தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் இவ்விடயம் முன்னுரிமைப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.

ஏற்படுத்தப்படுகின்ற புதிய அரசியலமைப்பானது நியாயமானதும் நிரந்தரமானதும் தமிழ் மக்களுக்குத் திருப்தியளிக்கக்கூடிய ஒன்றாகவும் இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் மந்தகதியிலான செயற்பாடுகள் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள கடும்போக்காளர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல ஓர் உந்துசக்தியாக அமைகின்றது. எனவே, இவ்விடயங்கள் தொடர்பில் அரசாங்கமானது முக்கிய கவனஞ்செலுத்தி கருமங்கள் துரிரதமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அதனைச் செய்வதற்கு சர்வதேச சமூகம் தனது தொடர்ச்சியான பயனுறுதிமிக்க ஈடுபாட்டினை இலங்கை அரசாங்கத்துடன் கொண்டிருக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திருப்திகரமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்: சம்பந்தன்

Post a Comment

Followers