Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“அரசியல் தீர்வு விடயத்தில் விரக்தியடையவோ விடயங்களை கைவிட்டுவிடவோ முடியாது. தற்போதைய சூழ்நிலையில் எமது நோக்கங்களில் தொடர்ந்தும் விடாப்பிடியாக இருந்து, விரைவானதும் வெற்றிகரமானதுமான முடிவைக் காண வேண்டும்'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“ஆட்சி மாற்றத்துக்காக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தமையை நாங்கள் ஏமாற்றமாகக் கருதவில்லை. நல்லாட்சி அரசாங்கம் மீது எமக்கு எந்த விரக்தியுமில்லை. ஆனாலும், இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு இன்னும் நிறைய செய்யவேண்டியுள்ளது.“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திலிருந்து வெளிவரும் ‘தி ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க மிகவும் சரியான தீர்மானத்தையே எடுத்தோம் என்பதில் எள்ளளவிலும் சந்தேகம் கொண்டிருக்கவில்லை.

மஹிந்த ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதோடு, நியாயமற்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே தமிழ் அரசியலுடன் மைத்திரிபால சிறிசேனவுக்குத் தொடர்பிருந்தது. தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதற்கு ஆதரவளித்தவர்களுள் மைத்திரியும் ஒருவர்.

குறிப்பாக, 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா கொண்டுவந்த அரசியலமைப்பு முன்மொழிவுகளுக்கு மைத்திரிபால சிறிசேன ஆதரவளித்துள்ளார். இவ்வாறான விடயங்களை வைத்து நோக்கும்போது, தமிழ் மக்கள் சார்பாக ஜனாதிபதி மைத்திரிக்கு அளித்த ஆதரவில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இனப் பிரச்சினைக்குச் சாதகமான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காக புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக நியமிக்கப்பட்ட பிரதமர் தலைமையிலான 21 பேர் அடங்கிய வழிநடத்தல் குழு தொடர்ச்சியான சந்திப்புகளை மேற்கொண்டு இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அது பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர் அரசியலமைப்புப் பணிகள் மிக விரைவாக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றேன். சில அரசியல் கட்சிகளின் சில நிலைப்பாடுகள் காரணமாக இந்தப் பணிகள் ஓரளவு தாமதமாகிவிட்டன.

இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்பான கேள்விகளும் உள்ளன. இவை தொடர்பில் எதுவும் செய்யப்படவில்லை என நான் கூறவில்லை. ஆனால், இன்னும் அதிகமாகச் செய்யப்படவேண்டும்.

தடுத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 40 முதல் 50 வீதமானோர் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான கேள்விகளுக்குச் சுமார் 20ஆயிரம் முறைப்பாடுகள் உள்ளன. இது எண்ணிக்கை அடிப்படையில் மிகப் பெரியதாகும். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான தகவல்களே அவர்களின் குடும்பங்களின் அடிப்படைத் தேவையாக உள்ளன. அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா? என்பது தொடர்பில் முடிவுகள் தேவை. அவர்களுக்குச் சில ஆறுதல்கள் இருக்கவேண்டும்.

அவர்கள் யதார்த்தத்துடன் இணங்கக்கூடிய வகையில் தமது வாழ்க்கையை முன்கொண்டுசெல்ல மறு சீரமைப்பு உதவிகள் அவசியமானதாகும். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 2015ஆம் ஆண்டு தமது இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை அரசு தமது கடப்பாடுகளை இன்னும் நிறைவேற்றவில்லை.

பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்தக் காலதாமதத்தால் தமிழ் மக்கள் மிகவும் அதிருப்தியடைந்துள்ளனர்.'' என்றுள்ளார்.

0 Responses to அரசியல் தீர்வு விடயத்தில் விரக்தியடையவோ, விடயங்களைக் கைவிட்டுவிடவோ முடியாது: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com