Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய வங்கி பிணைமுறி ஊழலுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி, அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சகலரும் கட்சி வேறுபாடின்றி தமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தம்மை பலப்படுத்த வேண்டுமேயன்றி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தம்மை பலவீனப்படுத்தும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2014ஆம் ஆண்டில் அப்போதிருந்த அரசாங்கத்திலிருந்து நான் வெளியேறியபோது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் என் மீது குற்றஞ்சாட்டியதுடன், தற்போது ஐக்கிய தேசிய கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். நான் எந்தவொரு கட்சியினருக்கும் துரோகமிழைக்கவில்லை. ஊழல், மோசடி, வீண்விரயம், ஏகாதிபத்தியம் மற்றும் குடும்ப ஆட்சி என்பவற்றிற்கு எதிராகவே நான் எப்போதும் செயற்படுவேன்.

நல்லாட்சி அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும், தம்முடன் இணைந்துகொள்ளுமாறும் முன்னாள் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். அவர் மூன்று தடவைகள் தோல்வியடைந்ததை தற்போது மறந்து செயற்படுகிறார். நாடு எதிர்நோக்கியிருந்த சர்வதேச சவால்களையும் அதிக கடன் சுமையினால் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொள்ள முடியாத தோல்வி நிலைமையே, மேலும் இரண்டு வருடங்கள் பதவி வகிக்கக்கூடிய சூழலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தியமைக்கு காரணம் என்பதுடன், 2015 ஜனவரி 08ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இரண்டாம் தடவையாக அவர் மீண்டும் என்னிடம் தோல்வியடைந்ததுடன், அதன் பின்னர் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மூன்றாவது தடவையாகவும் அவர் தோல்வியடைந்தார்.

இன்று மத்திய வங்கி அறிக்கை தொடர்பாக மேடைகளில் கூச்சலிடும் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் நிதி அமைச்சருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக் கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பத்தில் அதில் கலந்து கொள்ளாது பாராளுமன்றத்திலிருந்து ரவி கருணாநாயக்க வெளியேறியதும், அவருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்ததையும் தான் நன்கு அறிவேன். மத்திய வங்கி பிணைமுறி அறிக்கை தொடர்பாக எத்தகைய கருத்துக்களை அவர் தெரிவித்தபோதிலும், இந்த பாரிய மோசடி 2008ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளதை அவர் மறந்து விடக்கூடாது.

இன்று நாட்டைக் கூறு போடுகிறார்கள். விற்பனை செய்கிறார்கள் என மேடைகளில் கூச்சலிட்டுக் கொண்டிருப்பவர் வரலாற்றில் எந்தவொரு அரச தலைவரும் செயற்படாதவாறு கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்கு 240 ஏக்கர் காணியை சீன நிறுவனத்திற்கு சொந்தமாக வழங்க திட்டமிட்டிருந்ததையும், யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவ வீரர்களுக்கு இராணுவ தலைமையகத்தை இல்லாது செய்து இராணுவ தலைமையகம் அமைந்திருந்த 06 ஏக்கர் காணியை சங்கிரில்லா நிறுவனத்திற்கு சொந்தமாக வழங்கியதையும் மறுக்க முடியாது.

1818இல் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவமுடைய கந்த உடரட்ட கலவரம் ஏற்பட்டு 200 வருடங்கள் பூர்த்தியடையும் இந்த சந்தர்ப்பத்தில் நாட்டைப் பாதுகாப்பதற்கான அடுத்த போராட்டம் ஊழலுக்கு எதிராக இடம்பெற வேண்டும். இன்று தூய அரசியல் இயக்கத்திற்கான உரிமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் மட்டுமே உள்ளது என்றும் சுபீட்சமானதோர் தேசத்தை கட்டியெழுப்ப எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைகோர்க்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to பிணைமுறி மோசடியாளர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க பிரதமர் ஒத்துழைக்க வேண்டும்: ஜனாதிபதி

Post a Comment

Followers