Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் 12ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் அறிவித்துள்ளார்.

மே 15ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 27ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பபெற கடைசி நாளாகும்.

கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. 4.96 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 56, 696 வாக்கு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. எந்த புகார் வந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் பேட்டியளித்துள்ளார். புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு ஒரு வாரத்துக்கு முன்பே வாக்காளர்களுக்கு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க வாக்குச் சாவடி மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் செலவினத்தைக் கண்காணிக்க செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். வேட்பாளர்களின் தேர்தல் செலவாக ரூ.28 லட்சம் மட்டுமே அனுமதிக்கப்படும். தேர்தல் விதிமுறைகளை மீறாமல் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்படும். வாக்குரிமையை பயன்படுத்த அனைத்து வாக்காளர்களிடமும் தேர்தல் ஆணையம் பரப்புரை மேற்கொண்டுள்ளது. கன்னட மொழியிலும் வாக்குச் சீட்டு விவரங்கள் அளிக்கப்படும். தேவையான வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.

0 Responses to கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ஆம் தேதி தேர்தல்!

Post a Comment

Followers