Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“காவிரி விவகாரத்திலும், நமது உரிமைகளை விட்டுக்கொடுத்து மண்டியிட்டு கிடந்தால், தமிழக விவசாயிகளையும், மக்களையும் திரட்டி தி.மு.க. கடுமையான போராட்ட களத்தில் இறங்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். இது, இந்த மாநாடு மூலம், மத்திய-மாநில ஆட்சியாளர்களுக்கு தெரியப்படுத்தும் இறுதி எச்சரிக்கை என்று” தி.மு.க.வின் ஈரோடு மண்டல மாநாட்டில் ஸ்டாலினால் முன்மொழியப்பட்ட சிறப்பு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்னையான காவிரி நதிநீர் உரிமைக்காக திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. தலைவர் கலைஞர் முதல்வராகவும், சமூக நீதி காவலர் வி.பி.சிங் பிரதமராகவும் இருந்தபோதுதான், கலைஞரின் வலியுறுத்தலை ஏற்று, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைத்தது. நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு, இறுதி தீர்ப்பு ஆகியவை கிடைப்பதற்கு திமுக தலைமையிலான அரசு தொடர்ந்து பாடுபட்டதுடன், அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை மேம்படுத்தி, காவிரி டெல்டா விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகிவிடாதபடி, காவிரி நீர் கிடைப்பதற்கும் தொடர்ந்து ஆவன செய்தது. நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் தெரிவித்துள்ளபடி காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்காற்று குழுவும் உருவாக்கப்படுவது கட்டாயம் என காலக்கெடுவும் விதித்துள்ளது உச்சநீதிமன்றம். ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பை துச்சமென மதித்து, தமிழ்நாட்டை மேலும் வஞ்சிக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், ஏதேதோ சொல்லி, காலம் தாழ்த்திவருகிறது மத்திய அரசு.

தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் அ.தி.மு.க. தலைமையிலான மைனாரிட்டி அரசு, மத்திய ஆட்சியாளர்களுக்கு தீவிரமான அரசியல் அழுத்தம் கொடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆவன செய்யவேண்டும். இப்பிரச்னையில் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு திராவிட முன்னேற்ற கழகம், மாநில அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பையும் சிறிதும் பொருட்படுத்தாமல், காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக, 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற குழுவை அமைக்க மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பது, தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை முற்றிலுமாக பறித்து, முறித்துப்போடுகிற பகிரங்கமான எதிர்மறை செயலாகும். தலைவர் கருணாநிதி முதல்வராகவும், பாஜகவின் மூத்த தலைவர் வாஜ்பாய் பிரதமராகவும் இருந்தபோது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதிதீர்ப்பு வழங்கப்படாத நிலையில், காவிரி நதி நீர் ஆணையம் என்கிற அமைப்பு பிரதமர் தலைமையில் உருவாக்கப்பட்டது. இதனை, `பல் இல்லாத ஆணையம்’ என கேலியும் கிண்டலும் செய்தவர் அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பில் இருந்த ஜெயலலிதா என்பதை காவிரி பாசன விவசாயிகள் மறந்துவிடவில்லை.

இன்று, நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியாகி, அதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், அவை அனைத்தும் நீர்த்துப்போகும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக, காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற, `பல் இல்லாதது மட்டுமல்ல, உயிரற்ற ஒன்றை மத்தியஅரசு, கர்நாடக தேர்தல் லாபம் என்ற குறுகிய அரசியல் நோக்கில் உருவாக்க முனைந்தால், அ.தி.மு.க. அரசு தைரியமாக இந்த பச்சை துரோகத்தை எதிர்த்து நின்று, மேற்பார்வை ஆணையத்தை நிராகரித்து, மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதில், அழுத்தமான உறுதி காட்டவேண்டும். உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு மத்திய அரசிடம் எல்லா வகையிலும் வலியுறுத்த வேண்டும். மாநில உரிமைகளை தொடர்ந்து பறிகொடுத்து வரும் அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டின் உயிர் ஆதார பிரச்னையான காவிரி விவகாரத்திலும், நமது உரிமைகளை விட்டுக்கொடுத்து மண்டியிட்டு கிடந்தால், தமிழக விவசாயிகளையும், மக்களையும் திரட்டி தி.மு.க. கடுமையான போராட்ட களத்தில் இறங்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். இது, இந்த மாநாடு மூலம், மத்திய-மாநில ஆட்சியாளர்களுக்கு தெரியப்படுத்தும் இறுதி எச்சரிக்கை.” என்றுள்ளது.

0 Responses to காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்: தி.மு.க. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் தீர்மானம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.