Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஓ.பன்னீர்செல்வம், தம்பித்துரை உள்ளிட்டவர்கள் பார்வையிட்டார்கள் என்று விசாரணை ஆணையத்தில் வி.கே.சசிகலா வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு, மருத்துவனையிலிருந்த ஜெயலலிதாவை பார்வையிட வந்த அப்போதையை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவைப் பார்த்து, ஜெயலலிதா கையசைத்தார் என்றும் சசிகலா தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் கடந்த மார்ச் 12ஆம் தேதி சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் 55 பக்கங்கள் கொண்ட பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்தார். இதில் கூறியிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வாக்குமூலத்தில் சசிகலா கூறியிருப்பதாவது: “கடந்த 2016 செப்டம்பர் முதல்வாரத்தில் இருந்து ஜெயலலிதா உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அவருடைய உடலில் சர்க்கரையின் அளவு அடிக்கடி அதிகரித்து வந்தது. அதன்பிறகு ஒரு நீரிழிவு நிபுணரும், ஒரு தோல் நிபுணரும் அவரை பரிசோதித்து குறைந்த அளவிலான ‘ஸ்டீராய்டு’ மாத்திரைகளை சாப்பிட பரிந்துரைத்தனர்.

செப்டம்பர் 16ஆம் தேதி வரை மாத்திரை சாப்பிட்டார். செப்டம்பர் 19ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் வர ஆரம்பித்தது. 20ஆம் தேதி நான் அவரை ஓய்வு எடுக்குமாறு கூறினேன். ஆனால், அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் கூறினார். 21ஆம் தேதி மெட்ரோ ரயில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலம் சரியில்லாமல் இருந்த அவரை இரண்டு முறை டாக்டர் சிவக்குமார் பரிசோதனை செய்தார். ஜெயலலிதாவை மருத்துவமனை கொண்டு செல்ல வேண்டும் என்று பரிந்துரை செய்தார். ஆனால், ஜெயலலிதா மருத்துவமனைக்கு வர மாட்டேன் என்று கூறினார். 2016 செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் ஜெயலலிதா போயஸ் கார்டனில் முதல் தளத்தில் உள்ள தனது அறையில் பாத்ரூமில் பல் துலக்கிக்கொண்டு இருந்தார். திடீரென என்னை அழைத்து மயக்கமாக இருப்பதாக கூறினார். அவரை கைத்தாங்கலாக கொண்டு வந்து கட்டிலில் உட்கார வைத்தேன். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

மயங்கி கிடந்த ஜெயலலிதாவை இரண்டு தனிப்பாதுகாப்பு அதிகாரிகள் துணையோடு ஸ்டிரெச்சரில் தூக்கி வைத்து ஆம்புலன்சிற்கு கொண்டு சென்றோம். ஆம்புலன்சில் நானும், டாக்டர் சிவக்குமாரும் இருந்தோம். அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு 1 மணி நேரத்தில் அவரது உடல் நிலை சரியானது. பின்னர், எமர்ஜென்சியில் இருந்து அவரை வெளியில் கொண்டு வரும்போது ராமமோகன ராவ், ராமலிங்கம், ஷீலா பாலகிருஷ்ணன், பிரீத்தா ரெட்டி பார்க்கின்றனர். மறுநாள் காலையில் ஜெயலலிதா டாக்டரிடம் சசி நேற்றே என்னை மருத்துவமனைக்கு வர சொன்னார். நான்தான் வர மறுத்து விட்டேன். மயங்காமல் இருந்திருந்தால் என்னை அழைத்து வர மாட்டார் என்று ஜெயலலிதா சிரித்து கொண்டே கூறினார்.

செப்டம்பர் 27ஆம் தேதி ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த இரண்டாவது தள அறையில் இருந்து தரைத்தளத்தில் உள்ள ஸ்கேன் மையத்திற்கு ஸ்டிரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவரது பாதுகாப்பு அதிகாரி வீர பெருமாள், பெருமாள்சாமி அவரை பார்த்தனர். அவர்களிடம் ஜெயலலிதா பேசினார். அப்போது, ஜெயலலிதா நான் நலமாக இருக்கிறேன். டாக்டர்கள் சிறிது நாட்கள் இருக்க சொன்னார்கள். விரைவில் வீட்டிற்கு வந்து விடுவேன்’ என்றார். அப்போது, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், சி.விஜயபாஸ்கர், துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் தூரத்தில் இருந்து ஜெயலலிதாவை பார்த்தனர். அக்டோபர் 22ஆம் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அறை கண்ணாடி வழியாக வித்யாசாகர் ராவ் ஜெயலலிதாவை பார்த்தார். அப்போது, ஜெயலலிதா அவரை பார்த்து கையசைத்தார்.

நவம்பர் 19ம் தேதி ஜெயலலிதாவை தனி அறைக்கு மாற்றினார்கள். அப்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் உள்ளிட்ட ஒரு சில அமைச்சர்கள், மக்களவை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் ஜெயலலிதாவை பார்த்தனர். டிசம்பர் 4ஆம் தேதி மாலை 4.20 மணியளவில் ஜெயலலிதா கேட்ட பன் மற்றும் காபியை மருத்துவமனை செவிலியர் டிராலியில் கொண்டு வந்தார். அக்கா கட்டிலில் கால் நீட்டி உட்கார்ந்து கண்ணாடி போட்டுக்கொண்டு டிவியில் ஜெய் அனுமன் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார். சீரியல் முடிந்தவுடன் காபியை எடுத்து கொள்கிறேன் என்று கூறினார். நான் அக்கா சூடு ஆறி விடும் என்றேன். அவர் கையை காட்டி சற்று பொறு என்றார். சிறிது நேரத்தில் சீரியல் முடிந்தவுடன் ரிமோட்டை எடுத்து டிவியை ஆப் செய்தார். நான் டிராலியை ஜெயலலிதா அருகே வைக்க முயன்றேன். திடீரென ஜெயலலிதா உடலில் நடுக்கம் ஏற்பட்டது. நாக்கு ஒரு பக்கமாக வெளியில் தள்ளியது. பல்லை கடித்துக்கொண்டே ஜெயலலிதா சத்தமிட்டார். அப்போது, நான் அக்கா, அக்கா என்று கத்தினேன். ஜெயலலிதா என்னை பார்த்து இரு கரத்தையும் கொண்டு வந்தார்.

நான் கதறிக்கொண்டே அவர் கையை பிடித்தேன். அப்போது அவர் கையை பிடித்தபடி படுக்கையில் விழுந்தார். அங்கிருந்த டாக்டர்கள் துரித கதியில் அவருக்கு சிகிச்சை கொடுத்தனர். உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதால் சிறப்பு மருத்துவர்கள் வந்தனர். அவர்கள், ஜெயலலிதாவின் காது அருகே சென்று சத்தமாக கூப்பிட சொன்னார்கள். நான் அக்கா, அக்கா என பலமாக கத்தினேன். அப்போது இரண்டு முறை ஜெயலலிதா என்னை பார்த்தார். பிறகு ஜெயலலிதா கண்களை மூடி விட்டார். சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை அளிக்க வேண்டும். என்னை வெளியே போக சொல்லுங்கள் என்றனர். என்னால் தாங்க முடியவில்லை.

பின்னர் மறுநாள் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பிலே அறிவுறுத்தலின் பேரில் எக்ேமா தெரபி சிகிச்சை தரும் போது நான் பக்கத்தில்தான் இருந்தேன். டிசம்பர் 5ம் தேதி எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று டாக்டர்கள் கூறினர். ஆனால், அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது, அவரது அனுமதியுடன் நான் 4 வீடியோக்களை எடுத்தேன். அதைத்தான் தற்போது விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

எனினும், சசிகலாவின் வாக்குமூலம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களை விசாரணை ஆணையம் மறுத்துள்ளது.

0 Responses to மருத்துவமனையில் ஜெயலலிதாவை பன்னீர்செல்வம், தம்பிதுரை உள்ளிட்டோர் பார்த்தனர்: சசிகலா வாக்குமூலம்!

Post a Comment

Followers