Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைக் காப்பாற்றுவதற்கான எந்தத் தேவையும் தமக்கு இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

கூட்டு எதிரணியால் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கு எந்தக் காரணங்களும் இல்லை. ஆயினும், எதிர்வரும் 02 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படவிருப்பதாகவும் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் நான்காம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடையுமாயின் அன்றைய தினத்துடன் இணக்கப்பாட்டு அரசாங்கம் முடிவுக்குவந்துவிடும் என சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் இராஜாங்க அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

திறைசேரி முறி விநியோக மோசடி குறித்து சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு நியமித்த அமைச்சர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட விடயங்களே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குற்றச்சாட்டுக்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இதனை எதிர்ப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம். இந்த முடிவை ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தி இறுதித் தீர்மானம் 02ஆம் திகதி எடுக்கப்படும். நன்றிக்கடனை செலுத்துவதற்கான காலம் ஜனாதிபதிக்கு முடிந்துவிட்டது. நாட்டைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய காலம் வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர்களான டிலான் பெரேரா மற்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியுள்ளதாவது, ‘நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் 02ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் சந்திப்பில் இறுதி முடிவை அறிவிப்போம். பெரும்பான்மையான உறுப்பினர்களின் நிலைப்பாட்டுக்கு ஜனாதிபதி ஒத்துழைப்பார் என நம்புகின்றோம். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெறுமாயின் ஜனாதிபதியின் பதவி இல்லாமல் செய்யப்படும் என கூறப்படும் கருத்தில் எந்தவித உண்மையும் இல்லை. அரசியலமைப்பில் அவ்வாறான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இந்தப் பிரேரணை வெற்றிபெறுமாயின் அமைச்சரவை கலைக்கப்படும்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெறுமாயின் இணக்கப்பாட்டு அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகள் மத்தியில் பிழையான நிலைப்பாடொன்று புகுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் இணக்கப்பாட்டு அரசாங்கத்தை சிதைக்கும் வகையில் செயற்படுகிறார். அவருடைய நடவடிக்கைகளாலேயே இணக்கப்பாட்டு அரசு உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் முடிவுக்கு வரக்கூடாது எனக் கருதினால் பிரதமர் தனது பதவியை இன்றோ நாளையோ இராஜினாமா செய்ய வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19ஆவது அரசியலமைப்பின் கீழ் குறைக்கப்பட்டன. ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட அதேசமயம், ஏகாதிபத்தியம் கொண்ட பிரதமர் ஒருவர் உருவாக்கப்பட்டுள்ளார். தற்பொழுதுள்ள அரசியலமைப்பின் கீழ் பிரதமர் தானாக பதவி விலகினால் அல்லது மரணமடைந்ததால் அல்லது மரணிக்கச் செய்யப்பட்டாலேயே அவரை விலக்க முடியும். நல்லாட்சி அரசாங்கம் ஏகாதிபத்தியம் கொண்ட பிரதமரை உருவாக்கியுள்ளது.

பிரதமரின் கீழிருந்த மத்திய வங்கியை மீண்டும் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இதன்மூலம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க நாம் எடுத்திருக்கும் தீர்மானத்துக்கு அவர் ஆசீர்வாதம் வழங்கியிருக்கின்றார்.” என்றுள்ளார்.

0 Responses to பிரதமரைக் காப்பாற்றுவதற்கான எந்தத் தேவையும் எமக்கு இல்லை; ஜனாதிபதியுடன் பேசிய பின் இறுதி முடிவு: சுதந்திரக் கட்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com