Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் காவிரி உரிமையை மீட்க எதிர்வரும் 23ஆம் தேதி மனித சங்கிலியாய் இணைந்திடுவோம் என தொண்டர்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“எழுதுகின்ற கடிதங்கள் எல்லாமே போராட்டத்திற்கான அழைப்பாக இருக்கிறதே என்று நீங்கள் நினைப்பீர்கள். என்ன செய்வது, அடிப்படை தேவைகள் முதல் பறிக்கப்பட்ட உரிமைகள் வரை அனைத்தையும் பெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் போராடியே ஆகவேண்டும் என்ற நிலையில்தானே மத்திய, மாநில அரசுகளின் ஆட்சி லட்சணம் அமைந்திருக்கிறது. நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எப்போதோ அமைக்கப்பட்டு இருக்கவேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை, காலக்கெடு முடிந்தும் அமைக்காமல் காலம் கடத்தும் வஞ்சகச் செயலை மேற்கொண்டிருக்கிறது மத்திய அரசு. தமிழ்நாட்டின் உரிமையை மத்திய அரசிடம் வலியுறுத்தி போராட வேண்டிய மாநில அரசோ, கவர்னர் ஆட்சி செய்து கொள்ளட்டும், அரசாங்க கஜானாவை மட்டும் மிச்சம் மீதியிருக்கும் ஆட்சி காலத்திற்குள் கொள்ளையடித்து சுரண்டிக்கொள்வோம் என தன்மானமிழந்து தரையைக்கவ்வி ஆமையைப்போல அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறது.

வஞ்சகமும் சுயமரியாதை அற்ற கோழைத்தனமும் ஆட்சி செய்யும்போது, பொதுமக்களின் நலனுக்காகவும் மாநிலத்தின் உரிமைக்காகவும் ஓயாமல் குரல் கொடுத்து, களமிறங்கிப் போராட வேண்டியது எதிர்க்கட்சியாகிய நமது பணியும் கடமையும்தானே! அதைத்தான் தலைமேல் கொண்டு தொய்வின்றித் தொடர்ந்து ஆற்றி வருகிறோம். வீறுகொண்ட வேங்கையென எழுந்துள்ள இந்த போராட்ட உணர்வின் அடுத்தகட்டமாக, தோழமைக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசித்தபடி, பிரதமரை நேரில் சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருப்பதுடன் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்து, காவிரி உரிமையை நிலைநாட்ட மாபெரும் மனித சங்கிலி அறப்போராட்டம் ஏப்ரல் 23ம் தேதி திங்கட்கிழமையன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறவிருக்கிறது.

புதுக்கோட்டையில் நடைபெறும் மனித சங்கிலி அறப்போராட்டத்தில் உங்களில் ஒருவனாக நான் பங்கேற்கிறேன். அதுபோல, மக்களின் நலனுக்காகவும், விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் மாநில உரிமைக்காகவும் போராட்டக்களத்தில் தோளோடு தோள் இணைந்து நிற்கும் தோழமைக்கட்சி தலைவர்களான திக தலைவர் கி.வீரமணி சென்னையிலும், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.ஆர்.ராமசாமி சிவகங்கையிலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தஞ்சையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருவாரூரிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகிதீன் பெரம்பலூரிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கிருஷ்ணகிரியிலும், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியிலும் மனித சங்கிலி அறப்போரில் பங்கேற்கிறார்கள். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுகவினரும் தோழமைக் கட்சியினரும் திரளாக பங்கேற்கும் மனித சங்கிலி அறப்போராட்டம் ஏப்ரல் 23ம் தேதி மாலையில், நமது பொதுநோக்க உணர்வின் வெளிப்பாடாக, உரிமைப்போரின் ஒப்பற்ற அடையாளமாக நடைபெறவுள்ளது.

காவிரியில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை சட்டப்பூர்வமாக நிலைநாட்டமனித சங்கிலி போராட்டம் மறக்க முடியாத வெற்றிபெறும் வகையில் அந்தந்தப் பகுதியில் உள்ள தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகளையும் அரவணைத்து மனித சங்கிலி அறப்போராட்டத்தை நடத்திடவேண்டும்.

அதுபோலவே, கட்சி சார்பற்ற விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் என அனைத்து தரப்பு மக்களும் மாநில உரிமையை மீட்க, மனித சங்கிலியாய் இணைந்து நிற்கும் வகையில், அறப்போராட்டம் குறித்து அவர்களிடம் பிரசாரம் செய்து பங்கேற்கச் செய்திட வேண்டும். தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய ஆட்சியாளர்கள், இனியும் தமிழர்களை ஏமாற்ற முடியாது என கதிகலங்கும் வகையில் தமிழகத்தின் ஒற்றுமையை மனித சங்கிலி அறப்போராட்டம் வாயிலாக உணர்த்துவோம். எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் தக்கபாடம் புகட்டுவோம். காவிரியை மீட்க கைகள் கோர்ப்போம். மாநில உரிமையைப் பெற்றிட மனித சங்கிலியாய் இணைந்திடுவோம். ஒருங்கிணைவோம். வென்றிடுவோம்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழகத்தின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் வரும் 23ஆம் திகதி காவிரிக்காக மனித சங்கிலிப் போராட்டம்; மு.க.ஸ்டாலின் அழைப்பு!

Post a Comment

Followers