Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2016ம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆளுமையையும், வீரதீரத்தையும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எடுத்துக் கூறியபோது கண்மூடிக் கிடந்த சிங்கள தேசம், இப்போது, ஒரு புலிக்கதைக்காக ஏன் துள்ளி எழுந்து ஓலமிடுகிறது?

விஜயகலா மகேஸ்வரன் தமது அமைச்சுப் பதவியை மட்டும் துறந்தாரே தவிர தமது கூற்றை மீளப்பெறவில்லை என்பதையும் அதற்காக மன்னிப்புக் கேட்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழவேண்டுமென்றால், வடக்கில் பி;ள்ளைகள் பாதுகாப்பாக சென்றுவர வேண்டுமென்றால் புலிகள் மீண்டும் வரவேண்டும்.

இந்த வாசகத்தின் உரிமையாளர், இதனைக் கூறும்போது ராஜாங்க அமைச்சராகவிருந்த விஜயகலா மகேஸ்வரன்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த மாதம் 2ம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனை அவர் கூறிய அதே மேடையில் நல்லாட்சி அரசின் இரண்டு அமைச்சர்களும், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இருந்தனர்.

தனது மனதில் எழுந்த உணர்வின் உண்மையை உண்மையாகக் கூறியதால் அவருக்குக் கிடைத்த வெகுமதி அமைச்சுப் பதவி துறப்பு.

இதனை அவராகவே முன்வந்து செய்தாரா அல்லது அவரது கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பில் பதவி துறந்தாரா என்பது இன்னமும் சரியாகத் தெரிய வரவில்லை.

யுhழ்ப்பாணத்தில் தங்கியிருந்த விஜயகலா அவசரமாகக் கொழும்புக்கு அழைக்கப்பட்டு, அவரது கருத்தை ரணில் கேட்ட பின்னரே அவர் பதவி துறக்க நேர்ந்தது.

எனவே, ரணிலே அவரைப் பதவி துறக்குமாறு கேட்டுக் கொண்டாரென்று எடுத்துக் கொள்ள சாத்தியமுண்டு.

இதற்கிடையில், இன்னொரு தகவலும் காற்றில் பறந்து களைத்துப் படுத்துவிட்டது.

பதவி துறப்புக்காக பல கோடி ரூபாபை ஐக்கிய தேசிய கட்சி விஜயகலாவுக்கு வழங்கியது என்பதே அந்தத் தகவல்.

கப்பல்கள் வைத்து வணிகம் செய்யும் விஜயகலாவுக்கு, கட்சியின் கோடி எந்தளவுக்கானது? காலஞ்சென்ற கணவரான முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன் சேர்த்து வைத்தவைகளின் அதிபதியாக விஜயகலாவே இருக்கிறார்.

யாழ். மாவட்டத்தில் தேர்தல்களில் இரு தடவைகள் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இவர். இவ்வெற்றியும்கூட கணவர் வழியாக இவருக்குக் கிடைத்ததுவே.

அமைச்சராகவிருந்த தியாகராஜா மகேஸ்வரன் 2008 ஜனவரி முதலாம் திகதி புதுவருடதின வழிபாட்டுக்காக கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலுக்குச் சென்றவேளையில் அதன் உள்வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இக்கோவிலின் தர்மகர்த்தாவாக அன்றும் இன்றும் இருப்பவர் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரும் சேர். போன். இராமநாதன் வழித்தோன்றலுமான டி.எம்.சுவாமிநாதன் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.
விஜயகலாவின் கணவரது படுகொலை தொடர்பாக இதுவரை எவரும் கைதாகவில்லையென்பதும், இக்கொலை நடந்த வேளையில் மகிந்த ராஜபக்சவே ஜனாதிபதியாக இருந்தார் என்பதும் இங்கு மேலும் தெரியப்பட வேண்டியவை.

சுழிபுரத்தில் ஆறு வயதுச் சிறுமி றெஜினா படுகொலை செய்யப்பட்டதும், அராலியில் 59 வயதான வயோதிப மாது ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதுமான சம்பவங்களை அறிந்த துயரிலிருந்த விஜயகலா மகேஸ்வரன், யார்த்தமாகத் தெரிவித்த கருத்தே அரசியலில் பிரளயங்களை அங்கு உருவாக்கியது.

சிறுவர், மகளிர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் என்னும் வகையில் தமது தாயக மண்ணில் சிறாரும் மகளிரும் சந்திக்கும் அவலம் கண்டு வாய் மூடியிருக்க முடியாத ஒரு தாயின் குரலாகவே இவரது கூற்றைப் பார்க்க வேண்டும்.

புலிகளுக்கு ஆயுதம் வழங்க வேண்டும், புலிகள் பயங்கரவாதம் புரிய வேண்டும், குற்றச் செயல்களை தடுக்க முடியாதிருக்கும் பொலிஸாரை புலிகள் தண்டிக்க வேண்டுமென்று எதுவுமே விஜயகலா தெரிவிக்கவில்லை.

மீண்டும் புலிகள் வரவேண்டும் என்று இவர் கூறியதன் உட்கருத்தானது, புலிகள் காலத்தில் மக்கள் அச்சமின்றி நடமாடினார்கள், பாதுகாப்பாக வாழ்ந்தார்கள் என்பதே. இதைப் புரிந்து கொள்ள முடியாத இனவாதிகள் அதற்குத் தலை கால் வைத்து அர்த்தம் கற்பிக்கிறார்கள்.

இனவாதத்தின் கொந்தளிப்பைப் பார்த்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் “உண்மையைக் கூறுவதால் எவரும் பயங்கரவாதிகளாகிவிட மாட்டார்கள்” என்று கூறியதை, சிங்கள தேசம் ஒருபோதும் உணரப்போவதில்லை, ஏற்கப்போவதுமில்லை.

இனவாதத்தை ஊதி நெருப்பூட்ட விஜயகலாவின் புலிக்கதை தெற்கின் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு அரியதொரு தீப்பந்தமாகக் கிடைத்துள்ளது.

தமது அமைச்சுப் பதவியை துறந்தவேளையில் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த சில வரிகள் வரலாற்றுப் பதிவுக்குரியவை.

“வடக்கில் வாழும் மக்களின் துன்ப துயரங்களை வெளிக்கொணரும் வகையிலேயே எனது கருத்தைத் தெரிவித்தேன். அந்தக் கருத்தே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் எனது மக்களுக்காக அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்” என்பதே அந்த வரிகள்.

அமைச்சுப் பதவிக்கு அப்பால், தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் பறிக்க வேண்டுமென குரல்கள் தெற்கில் ஓங்கி ஒலிக்கின்றன.

விஜயகலாவின் புலிக்கதையானது எதிர்காலத் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியைப் பாதிக்கலாமென்று கருதும் அதன் தலைமை, தற்போதைக்கு அவரைச் சற்று ஓரந்தள்ளி வைக்க விரும்புவது தெரிகின்றது.

அதேசமயம், அடுத்தடுத்து வரவிருக்கும் மாகாணசபை, ஜனாதிபதி, பொதுத் தேர்தல்களில் தமிழ் வாக்குகளைப் பெற விஜயகலாவின் புலிக்குரல் தேவையென்பதையும் குள்ளநரி ரணில் புரியாமலில்லை.

இவ்வேளையில், 2016 டிசம்பர் 28ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், அமைச்சர் சுவாமிநாதன் அருகிலிருக்க, அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரையொன்றை இங்கு நினைவூட்டுவது இன்றைய காலத்தின் தேவையாகவுள்ளது.

கிளிநொச்சியில் இடம்பெற்ற தீ விபத்தொன்றில் தமது சொத்துகளை இழந்தவர்களுக்கு ந~;டஈடு வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி அரசாங்க செயலகத்தில் இடம்பெற்றது. இங்கு விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக அவரின் பெயரைக் குறிப்பிட்டு அவரது அபார திறமைகளை விஜயகலா மகேஸ்வரன் விதந்துரைத்தார்.

அந்த உரையின் முக்கியமான பகுதி பின்வருமாறு அமைந்திருந்தது:

“வல்வெட்டித்துறையைப் பிறந்தகமாகக் கொண்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக அல்லது பிரதமராக வந்திருக்க வேண்டியவர். அவர் அற்புதமான ஆளுமையும் வீரதீரமும் நிறைந்தவர். தற்போதைய ஜனாதிபதி (மைத்திரிபால சிறிசேன) பிரபாகரனுக்க நிகராக இருக்க முடியாதவர். தமிழ் மக்கள் செய்த துரதிர்~;டம் பிரபாகரன் நாட்டின் பிரதமர் ஆகாதது”.

அமைச்சராகவிருந்த விஜயகலா மகேஸ்வரன் இரண்டாண்டுகளுக்கு முன்னர் துணிச்சலாக நிகழ்த்திய இந்த உரை அனைத்து மொழி ஊடகங்களிலும் வெளிவந்தன.

ஆனால் இன்றுபோல் அன்று எவரும் துள்ளிக் குதிக்கவில்லை.

பிரபாகரனை வியந்தது மட்டுமன்றி, பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரோடு ஒப்பிட்டமைக்குக்கூட எவரும் கொதித்தெழவில்லை.

அன்று அவரை விரட்டியடிக்க முன்வராத சிங்கள் அரசியல்வாதிகள், இப்போது புலிகள் பற்றிக் குறிப்பிட்டதற்காக குய்யோ முறையோ என்று ஏன் குழறி அழுகிறார்கள்?

இதற்குக் காரணம் இல்லாமலில்லை.

அடுத்த ஜனாதிபதியாக வரவிரும்பும் கோதபாய ராஜபக்சவை ஹிட்லராகப் பார்க்க பௌத்த பீடாதிபதி ஒருவர் தெரிவித்த விருப்பம் பெரும் ரகளையாகியுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு சீனா 120 கோடி ரூபா பணம் (7.6 மில்லியன் டாலர்) கொடுத்ததாக நியுயோர்க் ரைம்ஸ் பகிரங்கமாக வெளியிட்டுள்ள செய்தி ஏற்படுத்தியுள்ள அரசியல் சூறாவளி சுழன்றடிக்கிறது.

ஜனாதிபதி மைத்திரியை பிரதமர் ரணில் அடுத்த தேர்தலில் எதிர்த்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளதால் ஏற்பட்டிருக்கும் பனிப்போர் வீச்சுப் பெற்று வருகிறது.

இந்தப் பிரச்சனைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்பி, இன்னொரு விடயத்தைப் பூதாகரமாக்க வேண்டிய தேவை சிங்கள அரசியல் தலைவர்களுக்கு அவசியமாகியுள்ளது.

இதற்குரிய சரியான ஆயுதமாக விஜயகலாவின் புலிக்கதை இவர்கள் கைகளில் அகப்பட்டுள்ளது. முத்தரப்பினாலும் இது இப்பொழுது சரியாகப் பயன்படுத்தப்படுகிறது.

மூவரது பிரச்சனைகளுக்கிடையில் தனியாக அகப்பட்டு பலிக்கடாவாக்கப்பட்டுள்ளார் விஜயகலா மகேஸ்வரன்.

அவர் தமது அமைச்சுப் பதவியைத் துறந்தபோதிலும் இரண்டு விடயங்களில் மிகவும் சாதுரியமாக நடந்துள்ளார்.

ஒன்று: புலிகள் தொடர்பாக தாம் தெரிவித்த கருத்தை அவர் மீளப்பெறவில்லை.

இரண்டு: புலிகள் மீண்டும் வரவேண்டுமென்று கூறியதற்காக அவர் மன்னிப்பும் கேட்கவில்லை.

இவை இரண்டுமே விஜயகலா மகேஸ்வரனின் இன்றைய பலம் - அமைச்சுப் பதவி அல்ல.

0 Responses to உண்மையைப் பேசும் உரிமை ஓர் அமைச்சருக்கு இல்லையா? | பனங்காட்டான்

Post a Comment

Followers