Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நசுக்கப் பார்ப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் விவாதம் இன்று காலை தொடங்கியது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தை புறக்கணித்து பிஜூ ஜனதா தளம் வெளிநடப்பு செய்தது.

இதனிடையே நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 06.00 மணிக்கு நடைபெறும் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை.


இதற்கு பின் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது காங். தலைவர் ராகுல்காந்தி உரை நிகழ்த்த தொடங்கினார். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ்த் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார் மோடி என்று குறிப்பிட்ட அவர், விவசாயிகளும், இளைஞர்களும் மத்திய அரசின் பொய் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அமித்ஷா மகன் ஜெய் ஷா விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி ஏமாற்றம் மட்டுமே அளித்துள்ளதாகவும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் மோடியின் நண்பர் பலனடைந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் ராகுல் காந்தி கூறியதாவது, “சீனப்பிரதமருடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை பிரதமர் மோடி நடத்தவில்லை. காவல்காரனாக இருப்பேன் எனக்கூறிய பிரதமர் மோடி பங்குதாரராக மாறிவிட்டார். பிரதமர் மோடியால் என் கண்களை பார்த்து நேருக்கு நேர் பேச முடியாது. உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைகிறது; இந்தியாவில் மட்டும் ஏறுகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏழைகள் பெரும் நெருக்கடியை சந்தித்தனர். பெரும் நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே பிரதமர் மோடி உதவி செய்கிறார்.சில நாட்களுக்கு முன்பு புதிய ஆதார விலையை அறிவித்து அரசு ஏமாற்று வேலை செய்தது.வாழ்த்தகுதியற்ற நாடாக இந்தியா இருப்பதாக இதழ் ஒன்றில் அட்டைப்படம் வெளியானது.' இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதனிடையே நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று தெரிவித்த அவர், நாட்டில் சிறுபான்மையினர், பழங்குடியினர் மீது தாக்குதல்களும் அதிகரித்துள்ளன என்று கூறினார். இதையடுத்து விளை பொருட்களுக்கு உரிய குறைந்தபட்ச ஆதார விலையை வலியுறுத்தி போராட்டம் நடந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் மட்டுமே அனைத்து அதிகாரங்களும் உள்ளன என்று கூறிய அவர், அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்படாததால் அமைச்சர்கள் எதுவும் பேச முடியவில்லை என்றும் நான் நன்றாகப் பேசுவதாக பாஜக எம்பிக்கள் சற்றுமுன் என்னிடம் கூறினர் என்றும் ராகுல் கூறினார். இறுதியாக 'பிரதமர் மோடிக்கு என் மனதில் என்றும் இடமுண்டு; காங்கிரசின் முக்கியத்துவத்தை உணர்த்தியதற்காக அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் ' என்று மக்களவையில் பேசி முடித்தவுடன் பிரதமரின் இருக்கைக்கு சென்று அவரைக் ராகுல்காந்தி கட்டி அணைத்தார்.

0 Responses to இந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப் பார்க்கிறது: நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தில் ராகுல் காந்தி பேச்சு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.