Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய அரசியலமைப்புக்கான வாய்ப்புகள் அனைத்தும் பொய்த்துப்போன புள்ளியில், இரா.சம்பந்தனுக்கும் ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் இடையிலான மிக முக்கிய சந்திப்பொன்று, அண்மையில் இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சந்திப்பின் ஏற்பாட்டாளராக இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் ஷியுவான் இருந்திருக்கின்றார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

சீன இராணுவத்தின் 91வது ஆண்டு நிறைவையொட்டி, சீனத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு, கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் விக்ரமசிங்கவோ அல்லது மூத்த அமைச்சர்களோ அழைக்கப்பட்டமைக்கான காட்சிகளைக் காண முடியவில்லை. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன மாத்திரம், அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்டிருந்தார்.

ஆனால், குறித்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். அத்தோடு, ஆச்சரியப்படும் அளவுக்கான விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் அழைக்கப்பட்டிருந்தார். சீனத் தூதரக நிகழ்வுகளில், கடந்த காலங்களில் அவர் கலந்து கொண்டிருந்தாலும், இராணுவ பாதுகாப்புச் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டதில்லை. அதுவும், கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரும் இல்லாது அவர் கலந்து கொண்டதில்லை. குறைந்தபட்சம் எம்.ஏ.சுமந்திரனையாவது தன்னோடு இருக்கும்படி சம்பந்தன் பார்ந்துக் கொண்டிருக்கின்றார். ஆனால், இம்முறை எல்லாமும் வழக்கத்துக்கு மாறாகவே நிகழ்ந்திக்கின்றது.

சம்பந்தனுக்கும் ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் இடையிலான இந்தச் சந்திப்புக்கு, அரசியல் - இராஜதந்திர ரீதியில் பல கோணங்கள் உண்டு. அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களைத் தவிர்த்துவிட்டு, எதிர்க்கட்சி வரிசையிலுள்ளவர்களை அழைத்து, ஊடகக் கவனம்பெறும் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதில், சீனா குறியாக இருந்திருக்கின்றது. அதுவும், கிட்டத்தட்ட தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்த ராஜபக்ஷக்களின் ஆட்சியை அகற்றுவதற்கு, மேற்கு நாடுகளுடனும் இந்தியாவுடனும் இணங்கிச் செயற்பட்ட சம்பந்தனுக்கு, சீனா தற்போது வழங்கியுள்ள முக்கியத்துவம் நிராகரிக்கப்பட முடியாதது.

அடுத்த இரண்டு ஆண்டுகளும் தேர்தல்களால் நிறையப்போகின்றன. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு தரப்புக்கும் ஒவ்வொரு விதமான செய்திகளைச் சொல்லியிருக்கின்றன. தென்னிலங்கையில் ராஜபக்ஷக்களின் கை மீண்டும் ஓங்குவதற்கான காட்சிகள் எழுந்த போது, வடக்கு- கிழக்கில் கூட்டமைப்பின் தோல்வி முகம் வெளிப்பட்டது. நல்லாட்சி, கூட்டு அரசாங்கம் என்கிற பெயரில் தங்களுக்கு இடையில் இழுபறிப்பட்டுக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் எதிர்பார்க்காத தோல்விகளைச் சந்தித்தன. இவ்வாறான கட்டத்தில், தென்னிலங்கையில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் போக்கில், சீனா தன்னுடைய நடவடிக்கைகளை வெளிப்படையாக ஆரம்பித்திருக்கின்றது.

இலங்கை தொடர்பிலான சீனாவின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் இராஜதந்திர நடவடிக்கை என்பது, ஒரே கோட்டிலேயே இதுவரை காலமும் இருந்தது. அதாவது, ஆட்சியில் யார் இருக்கின்றார்களோ அவர்களைக் கையாள்வது. அதனையே, 2015களில் ராஜபக்ஷக்களின் ஆட்சி அகற்றப்பட்டதன் பின்னரும் சீனா செய்து வந்தது. அதற்காக, தன்னோடு இணக்கமாக இருந்த ராஜபக்ஷக்களை சில விடயங்களில் வெளிப்படையாகக் கடிந்து கொள்ளவும் செய்தது. ஆனால், கடந்த ஒரு வருட காலத்தில், அந்த நிலைப்பாடுகளில் பாரிய மாற்றத்தைச் சீனா காட்டியிருக்கின்றது. ராஜபக்ஷக்களை மீண்டும் தன்னோடு அணைத்துக் கொண்டு, தனக்கு வேண்டாதவர்கள் என்று கருதிய அல்லது இதுவரை காலமும் போதிய முக்கியத்துவம் வழங்காத கூட்டமைப்பையும் கையாள எத்தனித்திருக்கின்றது.

சீனாவின் இந்த நடவடிக்கை, மைத்திரிக்கும் ரணிலுக்கும் மாத்திரமல்ல, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் கூட ஒரு வகையில் அச்சுறுத்தலானது. ஏனெனில், என்ன செய்தாலும், சம்பந்தன் தங்களுடன் இணக்கமான சூழலில் இருப்பார் என்றே இந்தத் தரப்புகள் நம்பின. சம்பந்தனும் அப்படி இருக்கவே இன்னமும் விரும்புகின்றார். ஆனால், அவர் எதிர்பார்த்திருக்கும் அரசியல் மாற்றங்கள் சாத்தியமாகாத போது, கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்த நினைக்கின்றார். அதன்மூலம், மேற்கண்ட தரப்புகளுக்கு ஒரு வகையில் எச்சரிக்கையையும் விடுத்திருக்கின்றார்.

சீனத் தூதரகத்தின் நிகழ்வில், சம்பந்தன் கலந்து கொண்டிருந்த அதே காலப்பகுதியில், யாழ்ப்பாணத்தில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் வடக்கு- கிழக்குக்கு அன்புலன்ஸ் வழங்கும் நிகழ்வொன்று நடாத்தப்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதில் கலந்து கொண்டார். கூட்டமைப்பின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். அந்த நிகழ்வில், இணைய வழி மூலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேரடியாக உரையாற்றியிருந்தார். வடக்கு, கிழக்குக்கான இலவச அம்புலன்ஸ் வழங்கும் நிகழ்வு என்பது, சீனத் தூதரகத்தின் இராணுவ நிகழ்வைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதுவும் மோடி, இணைய வழி நேரடியாக உரையாற்றும் தருணம், மிக முக்கியமானது. ஆனால், அதைச் சம்பந்தன் தவிர்த்துவிட்டு, சீனத் தூதரக நிகழ்கில் கலந்து கொண்டார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அதிக நம்பிக்கையோடு காத்திருந்தவர்களில் சம்பந்தன் முக்கியமானவர். அவர், தன்னுடைய காலத்துக்குள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குப் புதிய அரசியலமைப்பினூடாக இறுதித் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுத்துவிட முடியும் என்றும், அதன் மூலம், காலாகாலத்துக்கும் சாதித்த பெருமையைத் தான் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் நம்பினார். அதன்போக்கில்தான், ‘2016க்குள் தீர்வு; 2017 தீபாவளிக்குள் தீர்வு’ என்று அவர் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், தமிழ் மக்களை நோக்கித் தொடர்ச்சியாகப் பேசி வந்தார். இன்னமும் அந்தப் பேச்சுத் தொனியை அவர் மாற்றவில்லை.

எனினும், புதிய அரசியலமைப்புக்கான வாசல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டன என்பதை சம்பந்தன் உணராமல் இல்லை. இன்னமும் புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் கூட்டங்களிலோ, துறைசார் வல்லுநர்கள் சந்திப்புகளிலோ கலந்து கொள்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். அதன்போக்கில், சுமந்திரன் உள்ளிட்டவர்களை இன்னமும் அரசியலமைப்பு வரைபு சார்ந்த செயற்பாட்டுத் தளத்தில் வைத்துக் கொண்டிருக்கவும் விரும்புகின்றார். ஆனால், புதிய அரசியலமைப்புக் குறித்து தற்போது மைத்திரியோ, ரணிலோ கிஞ்சித்தும் ஆர்வத்தோடு இல்லை. இந்தியாவோ, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளோ கவனத்தில் எடுப்பதில்லை.

அவ்வாறான நிலையில், பாராளுமன்றத்துக்குள் புதிய அரசியலமைப்பு ஒன்றுக்காக பேசிப் பேசி எவ்வளவு தூரம், தொண்டைத் தண்ணீர் வற்றியதோ, அதே மாதிரியான கட்டத்தையே, ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த தரப்புகளும் சம்பந்தனுக்கு வழங்கியிருக்கின்றன. இது, அவரைப் பெரிய அளவில் கோபப்படுத்தியிருக்கின்றது. அப்படியான கட்டத்தில், தன்னுடைய அரசியல் நகர்வுகளில் ஒருவகையிலான வேகத்தைக் காட்ட வேண்டும் என்றும் அவர் விரும்பியிருக்கின்றார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவு, வடக்கு மாகாண சபைக்குள் தொடரும் குழப்பங்கள் போன்றவற்றுடன், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் நடவடிக்கைகளாலும் சம்பந்தன், ஏற்கெனவே எரிச்சலடைந்திருக்கின்றார். அத்தோடு, கூட்டமைப்பின் மீதான மக்களின் அதிருப்தி என்பது, எதிர்பார்க்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகரித்திருக்கின்றது. இவ்வாறான கட்டத்தில், இன்னொரு தேர்தலொன்றை நோக்கிய நகர்வு, எதிர்கால அரசியலில் இன்னும் பெரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் நினைக்கின்றார்.

அப்படியான நிலையில், பின்னடைவுகளுக்கு தடுப்புக்கட்டை போட்டு நிறுத்துவதற்கு, புதிய அரசியலமைப்பின் வழி, இறுதித் தீர்வு என்கிற விடயம் உதவும் என்று நம்புகின்றார். அதனால்தான், புதிய நண்பர்களோடு இணங்கிச் செல்வது தொடர்பில், தனக்குச் சிக்கல் ஏதும் இல்லை என்று மைத்திரியையும் ரணிலையும் மாத்திரமல்ல, அமெரிக்காவையும் இந்தியாவையும் நோக்கிக் கூறியிருக்கின்றார். அதற்கான நகர்வாகவே, சீனத் தூதரகத்தின் நிகழ்வுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில், வெளிப்படையாகத் தற்போதைக்குத் தெரிவது, அதிகபட்சமாக புதிய அரசியலமைப்புக்கான வரைபை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதோடு எல்லாமும் முடிந்துவிடும் என்பதே. இதனை, நோக்கியே ரணில் அதிக ஆர்வத்தோடு இருக்கின்றார். வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததும், கூட்டு எதிரணியும் சுதந்திரக் கட்சியும் முழுமையாக எதிர்த்து, அதைச் செல்லாக் காசாக்கிவிடும். அந்தச் சாக்கோடு புதிய அரசியலமைப்பு என்கிற கட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ள முடியும் என்று கருதுகிறார். அதன்போக்கில்தான், பாராளுமன்றத்தை இன்னமும் வலுப்படுத்தும் 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது சார்ந்து, அதிக ஆர்வத்தை ரணில் வெளிப்படுத்துகின்றார். அது, அவருக்கான எதிர்கால அரசியல் இருப்புக்கு உதவும். அதற்காக, ஜே.வி.பி.யின் வரைபுகளை அவர் மனதார வரவேற்கிறார். இதுதான், இன்றைய நிலை. இப்படியான கட்டத்தில்தான், சம்பந்தனின் ராஜபக்ஷக்களுடனான சந்திப்பை நோக்க வேண்டும்.

தமிழ்மிரர்

0 Responses to ராஜபக்ஷக்களுடனான சந்திப்பு: சம்பந்தன் யாரை எச்சரிக்கிறார்? (புருஜோத்தமன் தங்கமயில்)

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.