Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐதராபாத்தில் சுங்கச்சாவடி அருகே மொபட்டை நிறுத்தி விட்டு தோழியை பார்க்க சென்ற பெண் மருத்துவரை கடத்திச் சென்று லாரி ஓட்டுனர்கள் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் கொல்லப்பூர் கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி வந்த நரசய்யபள்ளியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் 27ந்தேதி பணி முடிந்து மொபட்டில் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

சாம்சாபாத்தில் (Shamshabad) உள்ள சுங்கச்சாவடி சாலையில் லாரிகள் மறைவில் சாலையோரம் தனது மொப்பட்டை நிறுத்திவிட்டு, வாடகை காரில் ஏறி தனது தோழியான இன்னொரு மருத்துவரை காண சென்றதாக கூறப்படுகின்றது. பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, மொபட் பஞ்சராகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனால் செய்வதறியாது திகைத்த அவர் செல்போன் மூலம் தனது சகோதரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது அங்கு நிற்கின்ற ஒரு சில லாரி ஓட்டுனர்கள் உதவுவது போல வந்து தன்னையே உற்று நோக்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கவனமாக இருக்கும்படி கூறிய சகோதரி அங்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து சுங்கசாவடிக்கு சென்று பார்த்த போது பஞ்சரானதாக சொல்லப்பட்ட பெண் மருத்துவரின் வாகனம் நம்பர் பிளேட் பெயர்த்து எறியப்பட்டு. அனாதையாக நின்றது பெண் மருத்துவரை காணவில்லை.

இதையடுத்து பெண் மருத்துவரை காணவில்லை என்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மறுநாள் காலையில் ஐதராபாத் அருகே பாலத்தின் அடியில் எரிக்கப்பட்ட நிலையில் பெண் மருத்துவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

பணி முடிந்து வீடுதிரும்பிய பெண் மருத்துவர் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்லும் சுங்கசாவடியில் இருந்து தனியாக நின்றவர் கடத்தி கொல்லப்பட்டது எப்படி என்ற கேள்வியுடன் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சுங்கச்சாவடியின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்த போலீசார் சுங்கச்சாவடியில் பஞ்சரான வண்டியை மருத்துவர் தள்ளிக்கொண்டு லாரிகளுக்கு இடையில் செல்லும் காட்சிகளை கைப்பற்றினர்.

அந்த பகுதியில் அந்த நேரத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றிய லாரி ஓட்டுனர் ஒருவரை சிசிடிவி காட்சியின மூலம் அடையாளம் கண்டு அவரை பிடித்து விசாரித்த போது பெண் மருத்துவரின் மரணத்துக்கான மர்மம் வெளிச்சத்திற்கு வந்தது.

இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு காரில் சென்ற பெண் மருத்துவரை அங்கு நின்றிருந்த 4 லாரி ஓட்டுனர்கள் கண்காணித்துள்ளனர். அவர்கள் பெண் மருத்துவரை தவிக்க வைக்கும் திட்டத்துடன் இருசக்கர வாகனத்தை பஞ்சர் செய்துள்ளனர்.

அவர் வண்டியுடன் சென்ற போது அவருக்கு உதவுவது போல் நடித்து இருட்டுக்குள் சாலையோரம் நின்ற லாரி மறைவில் இழுத்துச்சென்று தங்கள் வாகனத்தில் ஏற்றி கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் தங்களை போலீசில் காட்டிக் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக பெண் மருத்துவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

பாலத்துக்கு அடியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரது சடலத்தை வீசி அதன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு 4 கொடூரர்களும் தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து நான்கு பேரை பிடித்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொடூர கொலை சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி என பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தங்களின் கடும் கண்டனைத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

இரவு நேரத்தில் தனியாக செல்லும் பெண்களுக்கு இது போன்று தவிக்கும் நிலை ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையின் அவசர உதவி எண்ணான 100 என்ற எண்ணுக்கு அழைத்தால் போதும், நெடுஞ்சாலை காவல்துறையோ அல்லது சுங்கசாவடி மீட்பு வாகனத்தையோ அனுப்பி பத்திரமாக மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்திருப்போம் என்கின்றனர் காவல்துறையினர்.

0 Responses to பெண் டாக்டர் எரித்துக் கொலை..! 4 லாரி ஓட்டுனர்கள் அட்டூழியம்..

Post a Comment

Followers