Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நவம்பர் 16 ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும், தமிழர்களை ஒட்டுமொத்தமாக துடைத்தொழிக்க முயன்ற ராஜபக்சேவின் சகோதருமான கோத்தபாய ராஜபக்சேவும், ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசாவும் அதிபர் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக நிற்கிறார்கள்.
இவர்களுக்கிடையே... சிவாஜிலிங்கம் நல்லவர், நம்மவர், வல்வெட்டித்துறைக் காரர். இனிய நண்பர், தமிழர் மீதான பற்றால், பாசத்தால், சிங்கள ஆதிக்கவாதிகள் மீதான கோபம் கொப்பளிக்க, அதிபர் தேர்தலில் நிற்கிறார். அவருக்கு வாக்களிப்பதில் நாம் பெரு மகிழ்ச்சி அடையலாம். மனதிற்கு இதமான காரியம்தான். வாக்களித்த அன்று இரவு நன்றாக உறங்கலாம்.

ஆனால் அதன் விளைவுகள், தேர்தல் முடிவுகள் வரும்போது, வாக்கு எண்ணிக்கை முடியும் பொழுது, அதன் பிறகு நாம் நிம்மதியாக உறங்க முடியுமா? ஆனாலும் நம்மவர் தமிழர் இந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறதா? ஏதோ ஒரு சிங்களர்தான் குறிப்பாக, தென்னிலங்கையில் அதிகமாக இருக்கும் மக்கள் தொகையினர்தான், அதிகமாக வாக்களித்து சிறுபான்மை தமிழர்கள், வாக்குகளையும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் வாக்குகளையும் சேர்த்து பெற்று வெற்றிபெற முடியும்.
போட்டியிடும் ஒரு சிங்களர், (கோத்தா அல்லது சஜித் ) சிறுபான்மையினர் வாக்குகளையும் சேர்த்து பெற்றால்தான் வெற்றிபெற முடியும். சிறுபான்மை தமிழர்களுடைய வாக்குகளே பிளவு படுமானால், அதுவே சிங்கள பகுதியில் வாக்குகளை அதிகம் பெறுபவருடைய வெற்றிக்கே வழி வகுக்கும். இதில் ஜே.வி.பி. வேட்பாளரும், நமது நண்பர் சிவாஜிலிங்கமும், வெற்றிபெற வாய்ப்பு உள்ள வேட்பாளரின் தோல்விக்கும், சிறுபான்மையினர் வாக்குகளை அதிகம் பெறாத சிங்கள வேட்பாளரின் வெற்றிக்கும் வழி வகுத்து விடுவார்கள் அல்லவா?

நல்லவர்களுக்கு வாக்களிப்பதன் மூலமே, அல்லாதவர்களின் வெற்றிக்கு நாமே வழி வகுப்பது சரியா? சரத் பொன்சேகா, மஹிந்த ராஜபக்சேவை எதிர்த்து நின்ற போது, பொன்சேகா செய்த போர்குற்றங்களிலிருந்து, அவரைப் பற்றி கணக்குப் பார்க்காமல், ராஜபக்சே குடும்பம்தான் ‘அனைத்து இன அழிப்புக்கும் அரசியல் ரீதியான பொறுப்பு’ என்ற புரிதலில், தமிழர்கள் ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக பொன்சேகாவிற்கு வாக்களித்த வரலாறும் மறந்து விட்டோமா?
பொன்சேகாவிற்கு தென்னிலங்கையில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி ராஜபக்சே குடும்பத்தை, தனிமைப்படுத்த சஜித் பிரேமதாசா முயற்சி செய்தால் அந்த தந்திரத்தை புரிந்து கொள்ள வேண்டாமா? நிச்சயமாக ஒரே அதிபர் தேர்தல் வாக்குகள் மூலம் மட்டுமே, தமிழர்களுடைய வாழ்வாதாரத்தை நாம் திரும்பப் பெற முடியாதல்லவா? கோத்தபாய வந்தால் என்ன நடக்கும் , சஜித் வந்தால் என்ன நடக்கும் என்ன நடக்காது என்று கணக்கு பார்த்து தமிழர்கள் வாக்களிக்க வேண்டுமல்லவா?

இரண்டு சிங்களமும் வேண்டாம் என்பது தொலை நோக்கு பார்வை. அது சரியானதுதான் என்றாலும், உடனடியாக வரும் அதிபர் தேர்தலில், எந்த ஆள் வந்தால் தமிழர்கள் அடுத்த கட்ட நகர்வுக்கு நகர எத்தனிக்க முடியும்? இப்படி அமைதியாக பரிசீலனை செய்து பார்க்க வேண்டாமா? உணர்ச்சி வசப்பட்டு, ஒரு தமிழருக்கு வாக்களிப்போம் என்று கூற, இது, உள்ளாட்சி தேர்தல் அல்லவே , இது பிராந்திய கவுன்சில் தேர்தல் அல்லவே...

ஆகவே எடுக்கும் முடிவை நிதானமாக சிந்தித்து,வாக்களிக்க வேண்டுமல்லவா , வெளிநாட்டு சக்திகள் விருப்பத்தை நிரப்பி விடக் கூடாதே ? திடீரென இலங்கை சட்டத்திற்கு எதிராக, அதிபர் மைத்திரி மஹிந்தாவை பிரதமராக நியமித்தார் . அதற்கும் சர்வதேச கைங்கரியம் இருக்காதா? அந்த முயற்சி உச்சநீதிமன்றத் தலையீட்டால் தோல்வி அடைந்த பின்தான் ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடந்தது. ஈஸ்டர் குண்டுவெடிப்பை நடத்திய பயங்கரவாதிகளின் தற்கொலைப் படைக்காரர்களின் கைப்பேசிகளையும்,, டிவைசுகளையும்,அமெரிக்காவின் உளவுத் துறையான எப்.பி.ஐ ( F.B.I.). எடுத்துச் சென்று விட்டார்கள் என்று செய்தி வந்ததே? அதன்மூலம், பயங்கரவாதத்தை முறியடிக்க ராஜபக்சே குடும்பம்தான் வரவேண்டும் என்ற ஒரு மாயத் தோற்றத்தை சிங்களர்கள் மத்தியிலும் ஏற்படுத்தினார்களே? அது எல்லாமே திட்டமிட்டு இன்னாரை இலங்கை அதிபராக ஆக்கவேண்டும் என்று செய்யப்பட்டதா . ஒரு முயற்சி தோல்வி அடைந்ததால் இன்னொரு முயற்சி மூலம் ராஜபக்சே அணியை கொண்டுவர ஏற்பாடா?

சட்டவிரோத முயற்சி தோல்வி அடைந்த பிறகு, சட்டபூர்வமான முயற்சி எடுங்கள் என்று சர்வதேச சக்திகள் அறிவுரைதான் அதற்கு காரணமா . கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை விஷயத்தில்,அவருக்கு மறைமுகமாக ஒத்துழைத்த அமெரிக்க அரசின் செயல் கேள்விக்கு உள்ளாக வேண்டாமா ?.கொலை செய்யப்பட்ட சிங்கள ஊடகவியலாளர் லசந்த விக்ரமசிங்கே மகள் அஹிம்சா அமெரிக்காவில் போட்ட வழக்குகள் ஏன் தள்ளுபடி செய்யப்பட்டன? மலேசியாவில் உள்ள தமிழர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட இல்லாத புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக கைது செய்து சோக்சா சட்டத்தில் உள்ளே தள்ளியிருப்பது, இலங்கை அதிபர் தேர்தல் நேரத்தில் சர்வதேச சக்திகள் செய்யும் செயலா?
இப்படி நிறைய கேள்விகள் இருக்கின்றன. ஈழத் தமிழர்கள் சிந்தித்து உணர்ச்சி வசப்படாமல் வாக்களிக்க கற்றுக் கொள்ள வேண்டாமா?

0 Responses to ஈழத்தமிழர்கள் உணர்ச்சி வசப்படுகிறார்களா? -டி.எஸ்.எஸ். மணி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com