Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள், இறுதிக் கட்டத்தை அடைந்து கொண்டிருந்த தருணத்தில், “...தென் இலங்கையின் ஒவ்வொரு பௌத்த விகாரைகளுக்குள்ளும் இருந்து, ராஜபக்ஷக்களின் வெற்றி கட்டமைக்கப்படுகின்றது. இந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷவே வெற்றிபெறுவார். ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மாத்திரமே, சஜித் பிரேமதாஸ வெற்றிபெறுவார். ஆனாலும், நாங்கள் மிகுந்த அர்ப்பணிப்போடு, ராஜபக்ஷக்களைத் தடுத்து நிறுத்துவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம்...” என்று அப்போதைய அமைச்சரான மனோ கணேசன், இந்தப் பத்தியாளரிடம் கூறினார். தேர்தலுக்குப் பின்னர் இதை, அவர் தன்னுடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில் எழுதியுமிருந்தார்.

இலங்கையில் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான கருவியாக, ‘போர் வெற்றிவாதம்’ காலங்காலமாகக் கொண்டு சுமக்கப்படுகின்றது. ஓர் இனத்துக்கோ, மதத்துக்கோ, சமூகத்துக்கோ, பிராந்தியத்துக்கோ, நாட்டுக்கோ எதிராகப் போர் வெற்றிவாதத்தை முன்னிறுத்தும் போது, அதன் கீழ் மக்களை ஒருங்கிணைப்பது இலகுவானது.

ஏனெனில், ஒரு சமூகத்துக்குள்ளோ, இனத்துக்குள்ளோ இருக்கின்ற அகமுரண்பாடுகளைப் போர் வெற்றிவாதம் மூடி மறைத்துவிடும்; அது, மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறக்கப்பண்ணும் அளவுக்கு போதை தரக்கூடியது; உணர்ச்சித் தூண்டலுக்குரியது. அதனால், இனம், மதம் ரீதியிலான போர் வெற்றிவாதம், அதிகாரத்தை அடைவதற்கான வழிமுறையாக, உலகம் பூராகவும் கையாளப்படுகின்றது.

ஜனநாயக அடிப்படைகள், பல்சமூக கட்டமைப்புக்கான அங்கிகாரம் என்கிற நிலைகளைக் கடந்து, உலகம் மீண்டும் அடிப்படைவாதம், இனவாதம், நிறவாதம் என்கிற நிலைகளை நோக்கிப் பயணிக்கக் தொடங்கிவிட்டது. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி தொடங்கி, இந்தியாவை பா.ஜ.கவின் ‘காவி’ ஆட்கொண்டது வரை, அதற்கான உதாரணங்கள் நிறையவே உண்டு.

கடந்த 70 ஆண்டுகளாக, அடிப்படைவாதம், இனவாதம் என்கிற அரசியல் நிலைப்பாட்டில் இருக்கின்ற இலங்கைக்கு, தற்போதைய உலக ஒழுங்கும், ஒருவகையில் அங்கிகாரத்தை வழங்கியிருப்பதாகத் தென் இலங்கை கருதுகின்றது. அதுதான், கோட்டாவால் இந்தியாவில் வைத்தே, “13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. தமிழ் மக்களோடு அதிகாரங்களைப் பகிர முடியாது” என்று, வெளிப்படையாகவும் இறுமாப்போடும் சொல்ல முடிகின்றது.

இலங்கை மீதான இந்தியாவின் பிடிகளில், 13வது திருத்தத்தின் வருகையை இறுதி செய்த இலங்கை - இந்திய ஒப்பந்தம் முக்கியமானது. இலங்கையின் இனமுரண்பாடுகளுக்கான தீர்வோ, அது பற்றிய உரையாடலோ எந்தவொரு தருணத்திலும் 13வது திருத்தத்தைத் தாண்டிச் சென்றுவிடக் கூடாது என்று இந்தியா நினைக்கின்றது.

கோட்டாவின் இந்திய விஜயத்தின் போதும், 13வது திருத்தம் தொடர்பிலேயே நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கின்றார். ஆனால், இதை நேரடியாகவே கோட்டா நிராகரித்துவிட்டார். அது மட்டுமில்லாமல், இந்திய ஊடகங்களுக்குச் செவ்விகளை வழங்கி, ‘13வது திருத்தத்தை நிறைவேற்ற ஒத்துழையேன்’ என்பதை, “தென் இலங்கை மக்கள் விரும்பாத ஒன்றைத் தன்னால் செய்ய முடியாது” என்கிற கூற்றின் வழி, மீண்டும் மீண்டும் கூறியிருக்கின்றார். இது, இனமுரண்பாடுகளுக்கான தீர்வு, புதிய அரசியலமைப்பு பற்றிய செயற்பாட்டு வெளி, இனி வரப்போகும் ஐந்து வருடங்களுக்கு எப்படியிருக்கப் போகின்றது என்பதைத் தெட்டத் தெளிவாகவே பதிவு செய்திருக்கின்றது.

“...எனக்கு யாழ்ப்பாணம் வாழ் தமிழர்களின் கருத்துப் பற்றிக் கவலையில்லை; இப்போது அவர்களைப் பற்றி யோசிக்க முடியாது. அவர்களது வாழ்வு பற்றியோ, அவர்களது கருத்துப் பற்றியோ யோசிக்க முடியாது. வடக்கு மக்கள் மீது, அதிக அழுத்தம் பிரயோகிக்கப்படும் போது, இங்குள்ள சிங்களவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். தமிழ் மக்களை, நான் பட்டினிபோட்டால், சிங்கள மக்கள் மகிழ்வார்கள்...” என்று 1983, கறுப்பு ஜூலையை அண்மித்த தருணத்தில், அப்போதைய ஜனாதிபதியான ஜே.ஆர். ஜெயவர்த்தன, பிரித்தானியாவின் ‘டெய்லி ரெலிகிராப்’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் கூறியிருந்தார்.

ஜெயவர்த்தனவின் கூற்றுக்கும், “...பெரும்பான்மை சிங்கள மக்கள், தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்குவதை விரும்பவில்லை. அதனால், நான் அதைச் செய்யமாட்டேன்...” என்கிற கோட்டாவின் கூற்றுக்கும் இடையில் வித்தியாசம் ஏதுமில்லை. இவை இரண்டுமே, பௌத்த சிங்கள மேலாதிக்கவாதத்தின் நிறுவுகை; வெற்றிவாதத்தின் அடிப்படையில் வெளிப்படுபவை. ஆனால், அதில் இருக்கும் ஒரே நல்ல விடயம் என்னவென்றால், வெளிப்படையான பேச்சு என்பதுதான்.

ஜெயவர்த்தன காலத்தில், இலங்கையை இந்திரா காந்தி கையாண்டது மாதிரியான சூழல், தற்போது இல்லை. என்னதான், ராஜபக்ஷக்கள் மீதான அபிமானத்தை மோடியும் இந்திய வெளியுறவுத்துறையும் பெரிதாகக் கொண்டிருக்கவில்லை என்றாலும், அவர்கள் மீதான அழுத்தங்களை வழங்கும் சூழலும் தற்போது இல்லை. ஏனெனில், இந்தியாவையே விழுங்கும் அளவுக்கான, இராட்சத கட்டமைப்பை நிறுவிவரும் சீனாவின் அபிமானத்தை, ராஜபக்ஷக்கள் தொடர்ச்சியாகப் பெற்றிருக்கிறார்கள் என்பது, அதற்கான பெரும் தடையாகும்.

பாரிய போரை நடத்தி, நிலங்களைப் பிடிப்பதோ, நாட்டின் எல்லையை விஸ்தரிப்பதோ, தற்போதைய சீனாவின் அரசியல் அல்ல; மாறாக, பெருங்கடன்களை வழங்கி, பிராந்திய அரசியலைக் கட்டுப்படுத்துவதே அதன் முதல் தெரிவாகும். அதற்குச் சீனாவின் பொருளாதார முன்னேற்றம் என்கிற ஒன்று, அபரிமிதமாக ஒத்துழைக்கின்றது.

சீனாவின் பொருளாதாரத்தோடு, இந்தியாவால் போட்டிபோட முடியாது. அதனால், நேபாளம் தொடங்கி, பாகிஸ்தான், இலங்கை, மாலைதீவு உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்குப் பெருங்கடன்களை வகைதொகையின்றி வழங்குவதற்குச் சீனா தயாராக இருக்கின்றது. இந்தியாவால் கடன்களை, நிதியுதவிகளை வழங்கி, நுழைய முடியாத அனைத்து இடங்களிலும், சீனா அதன் வழியே நுழைகின்றது. அப்படியான சூழலில், ராஜபக்ஷக்கள் மீதோ அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளின் மீதோ, இந்தியாவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. வேண்டுமானால், 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு, இயங்கிய நிலையை ஒத்த நிலைக்குச் செல்லலாம்.

ஆனால், ராஜபக்ஷக்களின் வருகை ஒரு பத்து ஆண்டுகளை உறுதி செய்திருக்கின்ற நிலையில், பத்து ஆண்டுகளை மீண்டும் ஓர் அச்சுறுத்தலான நிலைக்குள் கொண்டு செல்வதை இந்தியா விரும்பாது. அதனால், ராஜபக்ஷக்களோடு கடந்த காலத்தில் காட்டிய கண்டிப்பை, இம்முறை காட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதுபோலவே, ராஜபக்ஷக்களும் இம்முறை இந்தியாவோடு ஓரளவு இணக்கத்தோடு இருக்கவே விரும்புகிறார்கள். ஆனால், அந்த இணக்கம் எந்தவொரு தருணத்திலும் தங்களின் எதிர்கால வெற்றிகளையோ, போர் வெற்றிவாதத்தையோ குலைக்கக்கூடாது என்றும் கவனமாக இருக்கிறார்கள்.

“13வது திருத்தச் சட்டத்தை, முழுமையாக நிறைவேற்ற முடியாது; அரசியல் அதிகாரங்களைப் பகிர முடியாது” என்று இலங்கையின் எந்தவொரு ஜனாதிபதியும் இந்தியாவில் வைத்து சொன்னதில்லை; மஹிந்த ராஜபக்ஷ கூட அப்படிச் சொன்னதில்லை. ஆனால், இதனை முதற்தடவையாக கோட்டா சொல்லியிருக்கிறார். அது, தென் இலங்கையில் பெரும் அபிமானத்தைப் பெற்றிருக்கின்றது. 13வது திருத்தம் நாட்டைப் பிரிக்கும்; அதிகாரப் பரவலாக்கம் நாட்டைப் பிரிக்கும் என்கிற பொய், தென் இலங்கையில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றது. இதைப் பௌத்த சிங்கள மேலாதிக்கவாத்தின் நிறுவனங்களும் கருவிகளும் இடைவிடாது பிரசாரப்படுத்துகின்றன. இப்படியான நிலையில், கோட்டாவின் நிலைப்பாடு என்பது, அந்தத் தரப்புகளால் கொண்டாடப்படுவதில் ஆச்சரியமில்லை.

இந்தக் கொண்டாட்ட மனநிலை என்பது, அடுத்த பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் அளவுக்கான ஒன்றாக மாற்றப்பட வேண்டும் என்று ராஜபக்ஷக்கள் விரும்புகிறார்கள். அதன்மூலம், ராஜபக்ஷக்களின் சாம்ராஜ்ஜியத்தைத் தொடர்ச்சியாக நிறுவுவதற்கு இடையூறாக இருக்கும், 19வது திருத்தச் சட்டத்தை நீக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.

பௌத்த சிங்கள மேலாதிக்கவாதம் எப்போதும், தன்னுடைய இனவாத - மதவாத, வர்க்கச் சிந்தனைகளோடு முரண்படாத ஒரு தரப்பு, ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றது. அதன்போக்கில், மன்னராட்சியை மீண்டும் நிறுவும் முயற்சிகளுக்குக்கூட இணங்கம் வெளியிடத் தயாராக இருக்கின்றது. அந்தத் தரப்புகள், ராஜபக்ஷக்களின் சாம்ராஜ்ஜியம் குறித்து அலட்டிக் கொள்வதில்லை. அப்படியான ஒரு சூழலில், ராஜபக்ஷக்களிடம் நாட்டின் இன முரண்பாடுகளுக்கான தீர்வு பற்றிய பேச்சுகளை யார், எங்கிருந்து, எப்படி ஆரம்பிப்பது என்பதுதான் ஒரே கேள்வியாக இருக்கின்றது.

0 Responses to இந்தியாவில் கோட்டா பேசிய வெற்றிவாதம்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com