Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை தீர்க்கமான முடிவொன்று கிடைக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகி, சஜித் பிரேமதாசவிடம் தலைமைப் பதவியைக் கையளிக்க வேண்டும் என்பது, தொடர்ச்சியான கோரிக்கையாகும். சஜித் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்காக தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

எனினும், பௌத்த பீடங்கள் கரு ஜயசூரியவை தலைவராக்குமாறு கோரி வருகின்றன. இந்த நிலையில், தலைமைத்துவ சபை ஒன்றை அமைத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதோடு, தலைமைப் பதவியில் தொடர்ந்தும் இருக்க ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருகிறார்.

ஆனால், எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தலைமைத்துவ சபையை நிராகரித்து, சஜித்தை தலைவராக்கும் முயற்சிகளை முன்னெடுக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்கு, சாதகமான பதில்கள் கிடைக்காத பட்சத்தில், இரகசிய வாக்கெடுப்பை நடத்தி, தீர்வைக் காணும் முயற்சிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கட்சி, எதிர்க்கட்சி பேதங்களின்றி, ஆளும் கட்சியுடன் இணைந்து, மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை சிறுசிறு துண்டுகளாக கிழிப்பதற்கு தாங்கள் தயார் எனவும் சஜித் பிரேதமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுத்தேர்தலில் தான் பிரதமராக தெரிவானால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற தயார் எனவும் தமக்கிடையே எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் முழுமையான ஒத்துழைப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வழங்கும் என்று அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இன்று சனிக்கிழடை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் உருவாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய ஆதரவைப் போல, எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் துரித அபிவிருத்திக்காக புத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது கட்டாயமாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உயர் தரம்வாய்ந்த கல்வியை வழங்குவதாக அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும் தனியார் கல்வி நிறுவனங்களும் உறுதியளிக்குமாக இருந்தால் இலங்கையில் கல்விக்காக வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க முடியும் என்பதுடன், உயர் கல்வித் துறையை நாட்டுக்காக அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மார்க்கமாக மாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2019 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலவசக் கல்வி இலங்கையில் சிறந்த மாற்றங்களை உருவாக்கியுள்ளது. அதனை நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும். தனியார் துறையில் கற்பதற்கு பண வசதியுள்ளவர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்லாது உயர் கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

நாட்டின் கல்வி முறைமையின் உண்மையான சாத்தியவளங்களை விரிவுபடுத்துவதற்கு நாம் செய்ய வேண்டிய விடயங்கள் ஏராளமுள்ளன. தற்போதைய கல்வி முறை பரீட்சையை மையமாகக்கொண்டதாகும். அது மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகள் குறுகிச் செல்ல காரணமாக அமைந்துள்ளது. அறிவு, திறன் மற்றும் ஆற்றல்களை கருத்திற்கொள்ளாது பரீட்சையை மையமாகக்கொண்டு எதிர்காலம் தீர்மானிக்கப்படுகின்றது.

அதனால் பெற்றோரினதும் சமூகத்தினதும் அமைதியின்மைக்கு வழிவகுத்துள்ளது. பிள்ளைகளின் வாழ்க்கையில் மிகவும் தீர்க்கமான காலப்பகுதியில் தனிப்பட்ட வளர்ச்சிக்கான பல சந்தர்ப்பங்கள் நழுவிச் சென்றுவிடுகின்றன.

21ஆம் நூற்றாண்டு அறிவின் நூற்றாண்டாகும். செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழிநுட்பம், இணையம், உயிர் தொழிநுட்பம், தன்னியக்கம் போன்ற தொழிநுட்பத் துறைகள் இனிவரும் சில தசாப்தங்களில் அபிவிருத்தியடைந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் அம்சங்களாக விளங்கும். இத்தொழிநுட்பங்களுக்கு ஏலவே செல்வதனூடாக பல வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இரண்டாம் நிலை கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு அரச வளங்களின் பற்றாக்குறை தடையாக இருக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நாட்டில் உயர் தரம்வாய்ந்த மூன்றாம் நிலைக் கல்வி வாய்ப்புகளை வழங்குவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமானால் நாட்டிலிருந்து மூளைசாலிகளின் வெளியேற்றத்தை தடுக்க முடியும் என்பதுடன் அந்நியச் செலாவணி குறிப்பிடத்தக்களவு நாட்டை விட்டும் வெளிச்செல்வதையும் குறைப்பதற்கும் உதவும்.“ என்றுள்ளார்.

இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அடுத்த மாதம் முதல்வாரத்தில் இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜகபக்‌ஷ ஏற்கனவே பலமுறை இந்திய விஜயம் மேற்கொண்டிருந்தாலும், அவர் புதிய பிரதமராகப் பொறுப் பேற்பேற்றுக் கொண்டதன் பின் மெற் கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.இதன் போது அவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்கவும், இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பான தீர்வுகள் தொடர்பில் உரையாடவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இவை தவிர இருநாட்டுத் தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் விரிவாகப் பேசவுள்ளதாகவும், இவற்றுக்கான முற் கூட்டிய பேச்சுவாரத்தைகள் இரு தரப்பு அதிகாரிகள் மட்டத்தில் ஆரம்பமாகியுள்ளதாகவும் அறியவருகிறது.

மாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது.

திருகோணமலை கடற்கரையில் காந்தி சதுக்கத்திற்கு அண்மையில்  இன்று மாலை 5 மணிக்கு இந்த நினைவேந்தல்  நிகழ்வு இடம்பெறவுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதிச் சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய வில்சன், துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால், பணியிலிருந்த போதே சுட்டுக் கொல்லப்பட்டார். இக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க, குடும்பத் தலைவரை இழந்து வாடும் எஸ்.எஸ்.ஐ வில்சன் குடும்பத்துக்கு, தமிழக அரசின் சார்பில் ரூ. 1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் பழனிசாமி இன்று வழங்கி ஆறுதல் தெரிவித்தார். தமது இரு மகள்களுடனும் தலைமைச் செயலகத்துக்கு வந்த, வில்சனின் மனைவி, மகள்களிடம் ரூ. 1 கோடி நிதியை முதலமைச்சர் வழங்கினார்.

முதல்வருடனான சந்திப்பின் பின்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி, " என் கணவரை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், எமது மூத்த மகளுக்கு தகுந்த அரசு வேலை அளிப்பதாகவும், முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். எனக்கு நேர்ந்த கொடுமை இனி யாருக்கும் நிகழக்கூடாது. அதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும்" எனவும் கேட்டுக் கொண்டார்.

“ஈழ அகதிகளுக்கு முழுப் பாதுகாப்பையும் பிரதமர் நரேந்திர மோடி அரசு வழங்கும். இலங்கை அகதிகள் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க அரசு தயாராக உள்ளது.“ என்று பா.ஜ.க தேசிய பொதுச் செயலர் ராம். மாதவ் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றியது. இச் சட்டம் நிறைவேறியது முதல் இன்று வரை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இச் சட்டத்திற்கு ஆதரவளித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் பல இடங்களில் பேரணிகள் நடைபெற்று வருகிறன.

இந்நிலையில், திருச்சியில் பா.ஜ.க சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பேரணி நடைபெற்றது. பேரணி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசிய பொதுச் செயலர் ராம்.மாதவ் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் பேசியதாவது, “ஆயிரக்கணக்கான தமிழக மக்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள். சில தலைவர்களும், சில மக்களும் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி தெரியாமலே எதிர்த்து வருகிறனர். இந்த சட்டம், இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ எதிரானதல்ல. மத துன்புறுத்தலுக்கு உள்ளாகி 50 ஆண்டுகளுக்கு முன் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை தருவது நமது கடமை. இலங்கை அகதிகளுக்கு முழுப் பாதுகாப்பை பிரதமர் நரேந்திர மோடி அரசு வழங்கும். இலங்கை அகதிகள் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க அரசு தயாராக உள்ளது. குடியுரிமை கொடுப்பதில் மத ரீதியிலான பிரிவினை கிடையாது. மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட அகதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நாடாக இந்தியா இருக்கும்.“ என்றார்.

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டத்தைத் தூண்டி விட்டதாகக் குற்றம் சாட்டி பிரிடன் தூதரை ஈரான் அரசு கைது செய்துள்ளது.

ஏற்கனவே உக்ரைன் பயணிகள் விமானத்தைத் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதற்காக ஈரான் மீது சர்வதேசம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த நடவடிக்கைக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட சர்வதேச நாடுகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

பயணிகள் விமானத்தை ஈரான் மனிதத் தவறு காரணமாக சுட்டு வீழ்த்தப் பட்டதாக உறுதி படுத்திய பின்னர் இச்செயலுக்காக அரசின் உயர் மட்டத் தலைவரான அயத்துல்லா காமேனிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரான் நகரங்களில் இளைஞர்கள், மாணவர்கள் எனப் பல்லாயிரக் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களைப் போராடத் தூண்டியதாகக் குற்றம் சாட்டியே பிரிட்டன் தூதர் ராப் மெக்கரை ஈரான் இராணுவம் கைது செய்து சில மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்திருந்த பின்னர் விடுவித்துள்ளது.

ஈரானின் இச்செயலால் ஆத்திரமடைந்த பிரிட்டன் மற்றும் அமெரிக்க அரசுகள் ஈரான் உடனே இதற்கு மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. இன்னொரு புறம் விமானத்தைத் தாக்கி வீழ்த்திய ஈரானுக்குத் தண்டனை வழங்கப் பட்டு இதில் தொடர்புடைய அதிகாரிகள் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் விளாடிமீர் இச்சம்பவத்துக்கு இழப்பீடு வழங்கவும், உக்ரைனின் 45 பேர் கொண்ட நிபுணர் குழு இது தொடர்பில் முழு விசாரணை நடத்தவும் ஈரான் அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 4 அமெரிக்கத் தூதரகங்களைத் தாக்குவதற்கு காசிம் சுலைமானி சதித் திட்டம் தீட்டியதாகவும், அதனால் தான் அவரைக் கொல்ல வேண்டி உத்தரவிட்டதாகவும் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கமளித்துள்ளார். மேலும் ஈராக் படைத் தளபதி சுலைமானி கொல்லப் பட முன்பு ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சூறையாடப் பட்டதையும் டிரம்ப் இதன் போது சுட்டிக் காட்டியிருந்தார்.

தற்போது உக்ரைன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய காரணத்தால், இச்சம்பவத்தால் பாதிக்கப் பட்ட பிரிட்டன், கனடா, உக்ரைன் போன்ற நாடுகளுடன் ஏற்கனவே பகையாளியாக இருந்த அமெரிக்காவும் ஈரானுக்கு எதிராகக் கைகோர்த்துள்ளன. இவை நான்கும் நேட்டோ உறுப்பு நாடுகள் ஆகும்.

கிளிநொச்சியில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்காதுவிடின் தான் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக முப்பது வயது பெண் ஒருவர் 9 மாதக் குழந்தையுடன் வீதியில் தனிநபராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் உள்ள காந்திக்கிராமத்தில் கசிப்பு பாவனை அதிகரித்துள்ளது எனவும் இதனால் தன்னைப் போன்ற பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான பாதுகாப்பான சூழல் காணப்படவில்லை, கசிப்பு பாவனையாளர்களால் அச்சமான நிலைமையே ஏற்பட்டுள்ளது, குடும்பத்தில் நிம்மதியில்லை, பாடசாலை பிள்ளைகள் நிம்மதியாக படிக்க முடியாதுள்ளது, குறிப்பாக பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது, வீடுகளின் வாசல்கள் வரை கசிப்பு விற்பனை வந்துவிட்டது, எப்பொழுதும் மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் இப்படி சொல்ல முயாத அளவுக்கு கசிப்பு பாவனையால் அவலம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இனியும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலேயே, தான் தனது குழந்தையுடன் இம்முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

இனியும் தன்னால் இந்த அவலத்தை அனுபவித்துக்கொண்டு வாழ முடியாது எனவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

தமது கிராமத்தின் கசிப்பு விடயம் தொடர்பாக கிராம அலுவலர் மற்றும் பொலிஸாருக்கு அறிவித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Followers