Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டிலுள்ள அனைத்து சிறார்களுக்கும் கல்வியைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் 13 வருட கட்டாயக்கல்வித் திட்டத்தினை புதிய தேசிய கல்விக் கொள்கையினூடு அறிமுகம் செய்யவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு உயர்தரத்தில் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைப்பதில்லை. புதிய கல்வி கொள்கை மூலம் சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்களும் உயர்தரத்தில் கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பம்பலப்பிட்டி முஸ்லீம் பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரான லலித் வீரதுங்க, பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை வாக்குமூலமளித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அனுமதி பெறப்படாத குடியிருப்புக்களுக்கு இனிமேல் எந்த விதத்திலும் இடமளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவ்வாறே, மேல்மாகாணத்தில் காணிகளை நிரப்புதலையும் முற்றாகத் தடை செய்யுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால் எதிர்பாராத விதமாக முழு நாடும் எதிர்நோக்கிய அனர்த்த நிலைமைக்கான முக்கிய காரணம் அனுமதி பெறப்படாத குடியிருப்புக்களும் காணிகளை நிரப்புதலுமாகும் என ஏற்புடைய பிரிவுகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுபற்றி கவனஞ் செலுத்தப்பட்டு ஒட்டுமொத்த நாட்டு மக்களும் மீண்டும் இவ்வாறானதோர் இன்னலை எதிர்கொள்ளாத வகையில் அரசாங்கத்தின் பொறுப்பினை நிறைவேற்றுமுகமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

அவசர அனர்த்த நிலைமையை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற வேளையிலேயே ஜனாதிபதி மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கினாலும் மண்சரிவினாலும் இடர்களை எதிர்கொண்ட பிரதேசங்களை உயர்பாதுகாப்பு வலயமாக பெயரிடுவதற்கு இதன் போது தீர்மானிக்கப்பட்டதுடன், இப் பிரதேசங்கள் மீண்டும் பாதிப்புக்குட்படுவதற்கான அபாயம் நிலவுவதாலும் இப்பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள வீடுகளில் மக்கள் மீளக்குடியேறுவதற்கு முன்னர் குறித்த வீடுகளை உரிய தொழிநுட்ப ரீதியான பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி இதன் போது உத்தியோகத்தர்களுக்கு அறிவிறுத்தல் வழங்கினார்.

தேசிய அனர்த்தங்களின் ஊடாக பல விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டில் சுனாமியுடன் கிடைத்த வாய்ப்பை நாம் தவறவிட்டுவிட்டதாகவும் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனரத்தத்தையேனும் இன, மத பேதமின்றி பிரச்சினையை தீர்க்க பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இயற்கை அனர்த்தங்களை ஏதோவொரு விடயத்தை எமக்கு உணர்த்துகின்றன. நாமாக திருந்தாவிட்டால் நம்மை இயற்கை அன்னை திருத்துவாள் என்று அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க, எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு மேலதிக நீதவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் நேற்றுத் திங்கட்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, மேலதிக நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன், 2012ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான சாட்சியை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, குற்றப்புலனாய்வு பொலிஸாரினால் அநுர சேனநாயக்க கைது செய்யப்பட்டார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியம் அமைப்பது தொடர்பிலான விடயம் சாத்தியமாகும் வாய்ப்புக்கள் காணப்படுகின்ற நிலையில், அதற்கு சமூக சேவை, சிறுவர் பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு ஆகிய அமைச்சுக்கள் அவசியமானவை என்பதால் அத்துறைகளை தான் மீண்டும் பொறுப்பேற்றுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்படும் போது முதலமைச்சரின் கீழ் இருந்த சமூக சேவை, சிறுவர் பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு ஆகிய துறைகள், இரண்டு வருடங்களுக்கு முன்னர்; சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், குறித்த மூன்று அமைச்சுகளையும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் திங்கட்கிழமை மாலை 06.30 மணியளவில் முதலமைச்சர் மீளப்பொறுப்பேற்றார்.

அமைச்சுகளை பொறுப்பேற்ற பின்னர் முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில், 'இந்த மூன்று துறைகளையும் நிர்வகிக்க முடியாத நிலையில் சுகாதார அமைச்சரிடம் கையளித்திருந்தேன். தற்போதுள்ள எனது செயலாளர் மற்றும் அதிகாரிகள் இந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக உள்ளமையினால், அதனை நான் மீள பெற்றுக் கொண்டிருக்கின்றேன்.

காணி விடயம் மற்றும் மீள்குடியேற்ற விடயத்தை நாம் வைத்துக் கொண்டு புனர்வாழ்வை வேறு அமைச்சரிடம் விடுவதனால் திறமையாக செயற்பட முடியாமல் சில நடைமுறை சிக்கல்கள் காணப்படுகின்றன. இவ்வாறான காரணங்களினாலேயே இந்த அமைச்சு துறைகளை நான் மீள பெற்றுக் கொண்டிருக்கின்றேன். வேறு காரணங்கள் எவையும் இல்லை.' என்றுள்ளார்.

மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

அந்தப் பகுதிகளிலுள்ள மக்களின் உயிர் மற்றும் உடமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கொழும்பு மாவட்டத்தில் நிலம் நிரப்பும் செயற்பாடுகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

நேற்று தமிழக முதல்வராக ஜெயலலிதா மற்றும் 28 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், நாளை சட்டப்பேரவைக் கூட உள்ளது.

நேற்று ஜெயலலிதாவுடன் 28 அமைச்சர்கள் மட்டுமே பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், பிற்பகலில் உடனடியாக மற்ற துறைகளின் அமைச்சர்களை அறிவித்தார் ஜெயலலிதா. இவர்கள் நாளைக் காலை 7.30 மணிக்கு அமைச்சரகாகப் பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளனர். இந்நிலையில் தற்காலிக சபாநாயகர் செம்மலை தலைமையில் நாளை சட்டப்பேரவைக் கூட உள்ளது.

சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர்கள் ஜூன் மாதம் 1ம் திகதி புதிய சட்டப்பேரவைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இன்று திமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், நாளைய சட்டப்பேரவை நிகழ்வுகள் மிக மிக சுவாரஷ்யமாக இருக்கும் என்று பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

உடனடியாக ஸ்மார்ட் சிட்டி தயாராகப் போகும் பட்டியலில் தமிழகத்தில் ஒரு நகரம் கூட இல்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டிகளாக்கத் திட்டமிட்டு, மாநிலங்களிடம் ஆலோசனையும் கேட்டார். அதோடு ஒரு மாநிலத்தில் இத்தனை இடங்களில் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார். இப்போது உடனடியாக ஸ்மார்ட் சிட்டியை உருவாக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ள மத்திய அரசு, ஹைதராபாத், சண்டிகர் உட்பட பல நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஆனால், ஸ்மார்ட் சிட்டிக்கு என்று 13 நகரங்களை தமிழகத்தில் எடுத்துக்கொண்ட மத்திய அரசு, இப்போது தேர்வாகி உள்ள நகரங்களில் ஒரு நகரத்தைக் கூட தமிழகத்தில் இருந்து அறிவிக்கவில்லை என்பது மிகவும் வருந்தத் தக்கது.

தேர்தலில் தோல்வி என்பதற்காக மற்றவர்களைப் போல சமரசம் செய்துக்கொள்ள மாட்டோம் என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தேர்தல் தோல்வியை அடுத்து எப்படி அரசியலை முன்னெடுத்துச் செல்லப் போகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பியபோது,மற்றவர்களைப் போல சமரசம் செய்துக்கொள்பவர்கள் நாங்கள் அல்ல என்றும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் இதே போன்று தனித்துப் போட்டியிடுவோம் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் பேசிய இவர், அதற்கான பணிகளை இப்போதே துவங்கி உள்ளோம் என்றும் கூறினார்.

Followers